பள்ளி மாணவிகளிடம் அவதூறு பேச்சு... - டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்

By Asianet TamilFirst Published Jul 11, 2019, 2:58 PM IST
Highlights

குறிப்பிட்ட பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்று, பள்ளி மாணவிகளை அவதூறாக பேசிய அரசு பஸ் கண்டக்டர், டிரைவரை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் மங்கலம்பாளையத்தில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் தாராபுரத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்.  அனைவரும் தாராபுரத்துக்கு தினமும் அரசு பஸ் மூலம் சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் மங்கலம் பாளையத்தை சேர்ந்த 5 மாணவிகள், ஒரு ஆசிரியை ஆகியோர்  மாலையில் தாராபுரத்தில் பள்ளி முடிந்து வீட்டுக்கு புறப்பட்டனர். இதற்காக, ஈரோட்டில் இருந்து பழனிக்கு செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்கள்.

அரசு பஸ்சில் டிரைவர் சையது அபுதாகீர், கண்டக்டர் ராம்நாத் ஆகியோர் பணியில் இருந்தனர். மாணவிகள் மற்றும் ஆசிரியை இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தது. ஆனால், டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார்.

வரிடம், நிறுத்தும்படி அவர்கள் கேட்டுள்ளனர். பின்னர் கண்டக்டரிடமும் முறையிட்டனர். அவரும், அவர்களை திட்டியதாக தெரிகிறது. அவர்கள் எவ்வளவு எடுத்து கூறியும், அவர்கள் அதை கேட்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து சுமார் 3 கிமீ தூரம் சென்று தேர்பட்டியில் நிறுத்தி, இறக்கியுள்ளார்.

அங்கு மாணவிகள் இறங்க மறுத்தனர். அவர்களை டிரைவர், கண்டக்டர் பழனிக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவிகள் மற்றும் ஆசிரியை ஆகியோரை டிரைவர், கண்டக்டர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

இதற்கிடையில், மாணவிகள் வீட்டுக்கு நீண்ட நேரமாக வராததால், அவர்களது பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் விசாரித்தபோது மாணவிகள் பழனியில் இருப்பது தெரிந்தது. இதனால் ஆத்திரமடை பெற்றோர், பொதுமக்கள், மாணவிகளை அதே அரசு பஸ்சில் கொண்டு வரவேண்டும் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து மாணவிகள் அதே பஸ்சில் மங்கலம் பாளையம் அழைத்து வரப்பட்டனர்.

இதுகுறித்து அலங்கியம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் டிரைவர் சையது அபுதாகீர், கண்டக்டர் ராம்நாத்  ஆகியோர் மீது பொது இடத்தில் தரக்குறைவாக பேசியது, அத்துமீறி பயணிகளை துன்பத்துக்கு ஆளாக்குவது 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், பொதுமக்கள், தாராபுரம் சப் கலெக்டர் பவன்குமாரிடமும், அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது புகார் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பந்தப்பட்ட பஸ் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கும்படி போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, டிரைவர் சையது அபுதாகீர், கண்டக்டர் ராம் நாத் ஆகியோரை சஸ்பெண்டு செய்து அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் குணசேகரன் உத்தரவிட்டார்.

click me!