தீபாவளியன்று சரவெடி பட்டாசு வெடிக்காதீங்க.. வெடித்தால் குற்றவியல் நடவடிக்கை... தமிழக அரசு கடும் எச்சரிக்கை!

By Asianet TamilFirst Published Oct 30, 2021, 9:57 PM IST
Highlights

சாதாரண வகை பட்டாசுகளை வெடிக்க எந்தத் தடையும் இல்லை. ஆனால், பேரியம் நைட்ரேட் ரசாயனத்தால் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் வெடிக்கக் கூடாது.

பேரியம் நைட்ரேட் ரசாயனத்தால் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள், அதிக நேரம் வெடிக்கக் கூடிய சரவெடி பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

தீபாவளி பண்டிகை நாட்களில் பட்டாசுகள் வெடிக்க ஏற்கனவே நேரக் கட்டுப்பாடு அமலில் உள்ளது. இதன்படி இந்தியாவில் தீபாவளி திருநாளன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த நேரத்தை அதிகரிக்க வேண்டும் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கமும், பட்டாசு வெடிக்க, தயாரித்து விற்பனை செய்ய தடை விதிக்கக் கோரியும் பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளையும் விசாரித்த உச்ச நீதிமன்றம் அதிரடியாக பல உத்தரவுகளைப் பிறபித்தது.

குறிப்பாக சரவெடியை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது. வேதிப் பொருட்களை கொண்டு பட்டாசுகளை தயாரிக்கவும், விற்கவும் தடை விதிக்கப்படுவதாகவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தடைசெய்யப்பட்ட பேரியம், பேரியம் நைட்ரேட் உட்பட உடலுக்கும் தீங்கு விளைவிக்கும்  வேதிப்பொருட்களை பட்டாசு தயாரிக்க பயன்படுத்தக் கூடாது. அதுபோன்ற பட்டாசுகள் தயாரிக்கவும், விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்படுவதாகவும் உச்ச நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்தது. 

மேலும் கொண்டாட்டம் என்ற பெயரில் பட்டாசு வெடித்து அதன் காரணமாக ஏற்படும் காற்று மாசால் ஒருவரின் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிப்பதை அனுமதிக்கவே முடியாது. இந்த விஷயத்தில் எந்த விதி மீறல் கண்டறியப்பட்டாலும் மாநில அரசுகள் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலத்தில் நீதிமன்றம் பிறப்பித்த பல உத்தரவுகள் மீறப்பட்டன என்றும் இந்த ஆண்டு அப்படியான விதி மீறல் எதுவும் நடக்கக் கூடாது என்றும்  மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, சரவெடி பட்டாசுகள் வெடித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சாதாரண வகை பட்டாசுகளை வெடிக்க எந்தத் தடையும் இல்லை. ஆனால், பேரியம் நைட்ரேட் ரசாயனத்தால் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள், அதிக நேரம் வெடிக்கக் கூடிய சரவெடி பட்டாசுகள், அதிக சத்தம் எழுப்பக்கூடிய சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பட்டாசுகள் ஆகியவற்றை வெடித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. 

click me!