கொரோனா நோயாளியுடன் தங்க உறவினர்களுக்கு அனுமதியில்லை.. ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை அதிரடி..!

By vinoth kumarFirst Published May 19, 2021, 12:17 PM IST
Highlights

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுடன் உறவினர்களுக்கு அனுமதி இல்லை என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுடன் உறவினர்களுக்கு அனுமதி இல்லை என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தினசரி 33,0000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது. மேலும், முழு ஊரடங்கிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளியை கவனித்து கொள்ள, உறவினர் ஒருவர் உடன் இருக்க அனுமதிக்கப்படுகிறார். இதற்காக, அவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா வார்டில் இருக்கும் உறவினர்கள், பொது இடங்களுக்கு எளிதில் செல்லக்கூடியவர்களாக உள்ளனர். இதனால், சமுதாயத்தில் தொற்று ஏற்படுகிறது. ஆகையால், நோயாளிகளுடன் உறவினர்களை அனுமதிக்க வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருந்தது. 

இந்நிலையில், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளுடன் உறவினர்களுக்கு அனுமதி இல்லை. தீவிர சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளை, முழு உடற்கவசம் அணிந்து வந்து கவனித்து கொள்ளலாம் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த பொதுமக்கள்,  மருத்துவமனை எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார், மருத்துவமனை நிர்வாகம் பேச்சு நடத்திய பின்னர் கலைந்து சென்றனர். 

இதுகுறித்து, மருத்துவமனையின் முதல்வர் தேரணி ராஜன்  கூறுகையில், கொரோனா  நோயாளியை கவனித்துக்கொள்ள, ஒரு உறவினருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அந்த அனுமதி சீட்டை வைத்து, வேறு சில உறவினர்களும் வந்து பார்த்து செல்கின்றனர். இவர்கள், வெளியே சென்று சமுதாயத்தில் தொற்றை  பரப்பக்கூடியவர்களாக உள்ளனர். இதனால், உறவினர்கள் அனுமதிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

click me!