புரட்டாசி முடிந்து முதல் வாரத்திலேயே தாறுமாறாக விலையேற்றம்… அதிர்ச்சியில் உறைந்த அசைவப்பிரியர்கள்.!

By manimegalai aFirst Published Oct 24, 2021, 9:42 AM IST
Highlights

புரட்டாசி மாதம் முழுவதும் காற்று வாங்கிய சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் தற்போது திருவிழா போல் களைகட்ட தொடங்கியுள்ளது.

புரட்டாசி மாதம் முழுவதும் காற்று வாங்கிய சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் தற்போது திருவிழா போல் களைகட்ட தொடங்கியுள்ளது.

புரட்டாசி மாதம் முழுவதும் சரிபாதியாக குறைந்திருந்த மீன்களின் விலை தற்போது இருமடங்காக அதிகரித்துள்ளது. புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் அசைவ உணவுகளை தவிர்ப்பதால், அதன் விலைகளும் வீழ்ச்சியில் இருந்தது. மீனவர்களும் குறைந்த அளவிலான மீன்களை பிடித்துவந்து விற்பனை செய்து வந்தனர். எப்போதும் திருவிழா கூட்டம் போல் காணப்படும் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் கடந்த மாதம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இன்றி காற்று வாங்கியது.

இந்தநிலையில் புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமையில் மீன் சந்தைகள், இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இறைச்சியின் விலையில் பெரிய மாற்றம் இல்லாதபோதிலும், மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.காசிமேடு மீன் சந்தையில் கடந்த வாரம் ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சங்கரா மீன் தற்போது 600 ரூபாயாக அதிகரித்துள்ளது.

கடந்தவாரத்தில் ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.900 ஆக இருந்தது. தற்போது அதன் விலை ரூ.1,300 ஆகவும், நெத்திலி மீன் விலை ரூ.250-ல் இருந்து ரூ.450 ஆகவும் அதிகரித்துள்ளது. ரூ.350-க்கு விற்கப்பட்ட இறால் மீன் தற்போது ஒரு கிலோ ரூ.900 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் மற்ற மீன்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

டீசல் விலை உயர்வும் மீன்கள் விலை அதிகரிக்க காரணம் என்று வியாபாரிகள் கூறுகின்றனர். அடுத்த வாரம் தீபாவளியில் இறைச்சி விலை உயரும் என்பதாலும், மீன்கள் விலை இந்த வாரத்தில் அதிகரித்திருக்கிறது. ஒரு மதமாக மீன்களை ருசிக்காமல் இருந்த அசைவ பிரியர்கள் விலையேற்றத்தையும் பொருட்படுத்தாமல் மீன்களை வாங்கிச் சென்றனர்.

click me!