ஆன்லைன் வகுப்பில் பாலியல் தொல்லை... ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமீன் மனு தள்ளுபடி...!

By Kanimozhi PannerselvamFirst Published May 31, 2021, 3:58 PM IST
Highlights

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் தாக்கல் செய்த ஜாமின் மனுவை போக்சோ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் கடந்த 24 ஆம் தேதி அப்பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலனை அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். 

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அப்படி ஆன்லைன் வகுப்பின் போது ஆசிரியர் ராஜகோபாலன் துண்டு மட்டும் அணிந்து கொண்டு அரை நிர்வாணத்துடன் வகுப்பு நடத்துவதும், மாணவர்கள் ஆன்லையில் இருக்கும் போது, குளியல் அறையில் இருந்து வருவது என மாணவிகளுக்கு பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் ஈடுபட்டு வந்துள்ளார். அதுமட்டுமின்றி பள்ளி வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள மாணவிகளின் எண்ணிற்கு ஆபாச படங்களை அனுப்புவது, நள்ளிரவில் போன் செய்து தொல்லை கொடுப்பது, சினிமாவிற்கு வா என கட்டாயப்படுத்துவது என பல்வேறு பாலியல் சீண்டல்களை செய்துள்ளார். 

இந்த விவகாரம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கிய நிலையில், தமிழக அரசும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளது. மாநில குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையமும்,  காவல்துறையும் இந்த விவகாரத்தில் விசாரண நடத்தி வருகின்றன. இந்நிலையில் ஆசிரியர் ராஜகோபாலன் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் வந்து கொண்டிருப்பது திடுக்கிட வைத்துள்ளது. ஏற்கனவே 2 மாணவிகள் ராஜகோபாலன் மீது புகார் கூறியுள்ள நிலையில், நேற்று கூட 3  மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாலியல் புகார்கள் குறித்து மாநில குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையம் பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகிகளை வரும் ஜூன் 8 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பியுள்ளது. 


இந்நிலையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் தாக்கல் செய்த ஜாமின் மனுவை போக்சோ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஏற்கனவே ராஜகோபாலன் 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரை மேலும் 5  நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!