சென்னையில் பாமாயில் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து.. அண்ணா சாலையில் பெருக்கெடுத்து ஓடிய எண்ணெய்

By karthikeyan VFirst Published Apr 12, 2020, 4:54 PM IST
Highlights

சென்னை அண்ணா சாலையில் ஜெமினி மேம்பாலத்தின் இறக்கத்தில் பாமாயில் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்ததில் 24 ஆயிரம் லிட்டர் எண்ணெய் வீணானது. 
 

கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் சாலைகள் வெறிச்சோடுகின்றன. ஊரடங்கை மீறி வெளியே வாகனங்களில் சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதுடன், அபராதமும் விதிக்கப்படுகிறது.

ஆனால் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், சென்னை துறைமுகத்தில் இருந்து மேடவாக்கத்திற்கு 24 ஆயிரம் லிட்டர் பாமாயிலை ஏற்றிச்சென்றது தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான லாரி.

சென்னை அண்ணாசாலையில் சென்றுகொண்டிருந்தபோது, ஜெமினி மேம்பாலத்தில் ஏறி இறங்கியபோது, தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் முருகன் நூலிழையில் உயிர் தப்பினார். ஆனால் அந்த லாரியில் இருந்த 24 ஆயிரம் லிட்டர் பாமாயில் சாலையில் ஊற்றி வீணானது. கீழே ஊற்றிய பாமாயில் வெள்ளம்போல் ஓடியது. அதன்மீது தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
 

click me!