1000 ரூபாய் நிவாரணம்..! தெருவோர வியாபாரிகளுக்கு கருணை காட்டிய அரசு..!

By Manikandan S R SFirst Published Apr 12, 2020, 11:27 AM IST
Highlights

சென்னை மாநகராட்சியில் 27 ஆயிரத்து 195 பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகள் உள்ளனர். அவர்களுக்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தமிழகத்திலும் ஊரடங்கு நடைமுறை கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அனைத்து வேலைகளும் நிறுத்தப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதால் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த தொடங்கியிருக்கின்றன. தமிழக அரசு சார்பாக அரிசி அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் இருக்கும் தெருவோர வியாபாரிகளுக்கும் ரூபாய் 1000 வழங்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.

நிவாரண நிதி பெற தகுதியான வியாபாரிகள் தங்கள் வங்கிக் கணக்கு விபரங்களை உடனடியாக வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக மாநகராட்சி தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சென்னை மாநகராட்சியில் 27 ஆயிரத்து 195 பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகள் உள்ளனர். அவர்களுக்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இதுவரை வங்கி கணக்கு விவரங்களை வழங்காத, பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகள் தங்கள் வங்கியின் பெயர் மற்றும் கிளை முகவரி, சேமிப்பு கணக்கு எண், கிளை குறியீட்டு எண், ஐ.எப்.எஸ்.சி குறியீட்டு எண் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை எண், வியாபாரியின் தொலைபேசி எண் ஆகியவற்றின் நகல்களை கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு வழிமுறைகளில் தகவல்களை வழங்க வேண்டும்.

அதன்விவரம் வருமாறு:-

1. சம்பந்தப்பட்ட மண்டல நகர விற்பனைக் குழு, மண்டல அலுவலகத்துக்கு நேரடியாக சென்று வழங்கலாம்.
2. ar-o-h-q-p-r-op1@gm-a-il.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக அனுப்பலாம்.
3. ‘9499932899’ என்ற தொலைபேசி எண்ணுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலமாக அனுப்பலாம்.
4. www.ch-e-n-n-a-i-c-o-r-p-o-r-at-i-on.gov.in என்ற இணையதள முகவரி மூலமாகவும் அனுப்பலாம்.

மேலும் சம்பந்தப்பட்ட மண்டல நகர விற்பனைக்குழு அலுவலகத்தில் விவரங்களை வழங்க மண்டல அலுவலகத்துக்கு வரும்போது கொரோனா தொற்று தடுப்புக்கான முன்னெச்சரிக்கை வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். இந்த தகவல்களை வியாபாரிகள் வழங்கும் பட்சத்தில் நிவாரண தொகை உடனடியாக சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

click me!