டுபாக்கூர் ஜோதிடர் இந்த சிறுவன்..! முகத்திரையை கிழித்த ஆர்.ஜே விக்னேஷ்..!

By Manikandan S R SFirst Published Apr 12, 2020, 2:03 PM IST
Highlights

இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் வரும் நாட்களில் இருக்கும் என்று அபிக்கியா தெரிவித்திருந்த நிலையில் அதுபோன்ற எந்த ஒரு சூழலும் தற்போது தென்படவில்லை. மேலும் உலகப் போர் வெடிக்கும் அபாயம் இருப்பதாக ஆருடம் கூறிய அபிக்கியா ஆனந்தின் கணிப்பும் பொய்யாகவே போயுள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த 14 வயது சிறுவன் அபிக்கியா ஆனந்த். தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். சிறுவயது முதலே ஜோதிடம், வானவியல் சாஸ்திரம் போன்றவற்றை பயின்று வரும் இவர் தனக்கென்று தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் சில வருடங்களாக நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி தனது யூடியூப் சேனலில் அபிக்கியா ஆனந்த் ஒரு அதிர்ச்சிகர செய்தியை வெளியிட்டிருந்தார். அதாவது நவம்பர் 2019 முதல் ஏப்ரல் 2020 வரை உலகம் மிக கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ளும் என்றும் அது உலகையே உலுக்கி எடுக்கக்கூடிய கொடிய வைரஸ் நோயாக இருக்கலாம் என்றும் ஆருடம் கூறியிருந்தார். அதுபோலவே தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்குநாள் அதிகரித்து வந்த உயிரிழப்புகள் தற்போது ஒரு லட்சத்தை கடந்து இருக்கிறது. இதனால் தான் கூறியது பலித்து விட்டதாக தெரிவித்த ஆனந்த் மேலும் பல ஆருடங்களை கூறத் தொடங்கியிருக்கிறார்.

இதனிடையே சிறுவன் கணித்துக் கூறிய பல தகவல்கள் நடைபெறவில்லை என பிளாக் ஷீப் யூடியூப் சேனல் நடத்தும் விக்னேஷ் காந்த் ஆதாரங்களுடன் காணொளி வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறும்போது, கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரலில் அபிக்கியா ஆனந்த் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். ஜூன் 2019 இல் தென் கிழக்கு மற்றும் வட மேற்கு இந்தியப் பகுதியில் பெரிய பிரச்சனை ஏற்படும் என்றும் அது நோயாக கூட இருக்கலாம் எனவும் அபிக்கியா தெரிவித்தார். ஆனால் அது போன்ற எந்த ஒரு பிரச்சனைகளும் இந்தியாவில் அந்த சமயத்தில் நிகழவில்லை. அதுபோல இந்தியா 2019ஆம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என்று அபிக்கியா கூறினார். ஆனால் 2014 ஆம் ஆண்டு முதலே சரிவில் இருக்கும் இந்திய பொருளாதாரம் 2019ல் அதே நிலையில் நீடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

இதையடுத்து உலகம் முழுவதும் எண்ணெய் பொருட்களின் விலை இந்த சமயத்தில் அதிகமாகும் என அபிக்கியா தெரிவித்தற்கு நேர் மாறாக தற்போது உலகம் முழுவதும் எண்ணெய் விலை கணிசமாக குறைந்து வருகிறது. இந்தியாவிலும் ஏற்றம் இல்லாமல் சீரான விலையில் விற்கப்படுகிறது. இன்னுமொரு வீடியோவில் இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் வரும் நாட்களில் இருக்கும் என்று அபிக்கியா தெரிவித்திருந்த நிலையில் அதுபோன்ற எந்த ஒரு சூழலும் தற்போது தென்படவில்லை. மேலும் உலகப் போர் வெடிக்கும் அபாயம் இருப்பதாக ஆருடம் கூறிய அபிக்கியா ஆனந்தின் கணிப்பும் பொய்யாகவே போயுள்ளது.

ஒரு வேளை உலகம் அழிவை சந்திக்கிற இக்கட்டான சூழலை மிகப்பெரிய ஜோதிட வல்லுனர்கள் கணித்தாலும் அதை வெளிப்படையாக வெளியே கூற மாட்டார்கள். ஆனால் அபிக்கியா ஆனந்த் நேர்மாறாக மக்களை பயமுறுத்தும் விதமாக தகவல்களை அளித்து கொண்டிருக்கிறார். மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும்போது சிறுவன் கூறிய பல தகவல்கள் இதுவரை நடைபெறவில்லை என்பது தான் உண்மை.  நாத்திகர்களால் தான் உலகம் அழிவை சந்திப்பதாகவும் கடவுள் நம்பிக்கை அதிகரித்தால் இவற்றை வெல்லலாம் என அபிக்கியா கூறியுள்ளார். அவர் பதிவிட்ட வீடியோக்களில் 30 வினாடிகள் கூறிய சம்பவம் மட்டுமே எதர்ச்சையாக நடந்து இருப்பதால் மக்கள் யாரும் பயம் கொள்ள தேவையில்லை. அனைவரும் நல்லெண்ணத்தோடு கொரோனாவை எதிர்கொண்டாலே வென்று விடலாம்’. இவ்வாறு ப்ளாக் சீப் விக்னேஷ் காந்த், சிறுவன் அபிக்கியா ஆனந்தின் கணிப்புகளுக்கு எதிராக காணொளி வெளியிட்டுள்ளார்.

click me!