‘சூரப்பா எங்கு சென்றாலும் விடமாட்டோம்’... ஒரு நபர் விசாரணை ஆணைய நீதியரசர் கலையரசன் கறார்...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 12, 2021, 11:34 AM IST
Highlights

ஓய்வு பெற்ற அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார் 80 சதவீதம் நிறைவு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். அண்ணா பல்கலைக்கழக பணி நியமனம், பதவி உயர்வு உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.200 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக தமிழக உயர்கல்வித்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த பணி நியமன ஊழல் விவகாரத்திற்கும் சூரப்பாவிற்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. 

இதனையடுத்து அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. சூரப்பா மீது புகார் அளித்தவர்கள் நேரில் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இதனிடையே, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் நேற்றுடன் (ஏப்.11) நிறைவடைந்தது. 

இதனிடையே சூரப்பா பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து நீதியரசர் கலையரசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி ஓய்வு பெற்ற அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார்கள் குறித்த 80 சதவீத விசாரணை நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இன்னும் 3 அல்லது 4 சாட்சிகளை மட்டுமே விசாரிக்க வேண்டி உள்ளதாகவும், அதன் பின்னர் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் தொகுத்து சூரப்பாவிடம் பதில் கேட்கப்படும் என்றும் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. 

எழுத்துப்பூர்வமாகவோ அல்லது நேரிலோ சூரப்பா பதிலளிக்கலாம் என்றும், ஒருவேளை சூரப்பா அளிக்கும் எழுத்துப்பூர்வ விளக்கத்தில் திருப்தி இல்லை எனில் நேரில் அழைத்து விசாரிக்கப்படுவார் என்றும் நீதியரசர் கலையரசன் தெரிவித்துள்ளார். இதுவரை ஆணையம் கேட்டுள்ள ஆவணங்களை அண்ணா பல்கலைக்கழகம் முறையாக தாக்கல் செய்யவில்லை என்று தெரிவித்த நீதியரசர் கலையரசன், சூரப்பாவின் பதவிக்காலம் முடிந்து அவர் எங்கு சென்றாலும் நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும், அதற்கு முறையான பதிலளிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். 
 

click me!