மாஸ்க் போட மறக்காதீங்க மக்களே... இல்லைன்னா உங்களுக்கும் இதே கதி தான்... சென்னையில் நடந்த தரமான சம்பவம்!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 11, 2021, 5:08 PM IST
Highlights

சென்னையில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். 

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் தீயாய் பரவி வரும் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. எனவே கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாநகராட்சி ஆணையர் கடும் கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தார். 

​அதன் படி, சென்னையில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம். வணிக வளாகங்கள், சலூன்கள், ஜிம் உள்ளிட்ட இடங்களில் விதிகளை பின்பற்றாவிட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. 

அதேபோல் சென்னையில் கொரோனா விதிகளை மீறுவோரிடம் நாள்தோறும் ரூ.10 லட்சம் அபராத இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும், .ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் தலா 1.50 லட்சம் தினசரி அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் தெரிவித்துள்ளார். கோடம்பாக்கம் மண்டலத்தில் தினசரி 1.25 லட்சம் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அண்ணாநகர் மண்டலத்தில் விதிகளை மீறுவோரிடம் இருந்து தினசரி ரூ.1 லட்சம் அபராத இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  

அந்த வகையில் சென்னை காவல்துறையினரும் முகக்கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் வாகனம் ஓட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனடிப்படையில் நேற்று மட்டும் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்த 659 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


 
கடந்த 8 ஆம் தேதி முதல் முகக்கவசம் அணியாமல் வந்த 1,118 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு,  2  லட்சத்து 12 ஆயிரத்து 400 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீதும் இதுவரை 4 வழக்குகள் பதியப்பட்டு 2 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையாக விதிக்கப்பட்டுள்ளது.

click me!