இனி காய்கறி மட்டுமல்ல இவையும் வீடு தேடி வரும்... சென்னை மாநகராட்சி ஆணையர் அசத்தல்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 26, 2021, 12:22 PM IST
Highlights

மக்களின் தேவைகள் கருதி வியாபாரிகள் முட்டை, பிரெட் போன்றவற்றையும் கொண்டு செல்ல வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். 

​தமிழகத்தில்ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் அனைத்தையும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை நடமாடும் வாகனங்கள் மூலமாக காய்கறி, பழங்கள் ஆகியன விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

சென்னையில் நடமாடும் காய்கறி கடைகளை கண்காணிக்க மண்டல வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், புகார்களை விசாரிக்க கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்திருந்தார். மேலும் மூன்று சக்கர வாகனம்/தள்ளுவண்டி மூலம் காய்கறிகள் மற்றும் பழ வியாபாரம் செய்பவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினால் பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 044-45680200 என்ற தொலைபேசி மற்றும் 9499932899 என்ற கைப்பேசி எண் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது: சென்னையில் நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையாளர்களின் தகவல்கள் தொலைபேசி எண்ணுடன் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் மக்கள் தங்களுடைய பகுதிக்கு வர உள்ள காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை குறித்த விவரங்களை அறிய முடியும் என தெரிவித்தார். மக்களின் தேவைகள் கருதி வியாபாரிகள் முட்டை, பிரெட் போன்றவற்றையும் கொண்டு செல்ல வேண்டும். அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பட மாநகராட்சி சார்பில் ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

click me!