முதல் நாளே இப்படியா?... தலைநகரில் தளர்வுகளற்ற ஊரடங்கால் வசமாக சிக்கிய வாகன ஓட்டிகள்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 25, 2021, 5:44 PM IST
Highlights

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு காலத்தில் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 2 ஆயிரத்து 409 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ஆயிரத்து 805 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

தமிழக அரசால் 10.5.2021 முதல் 24.5.2021 காலை வரையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்த நிலையில், கொரோனாபரவலை கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கையாக, 24.5.2021 காலை முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளில்லா முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் நேற்று காலை முதல் முறையான முழு ஊரடங்கு பணிகளை தீவிரபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்பேரில், சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 எல்லை வாகன தணிக்கை சாவடிகள் மற்றும் அனைத்து காவல் நிலைய எல்லைகள் செக்டார்களாக வகைப்டுத்தி உரிய சாலை தடுப்புகள் மற்றும் வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைத்து கண்காணித்து, மிக அத்தியாவசிய தேவைக்காக பொதுமக்கள் செல்ல இ-பதிவு சான்று கட்டாயமாக்கப்பட்டு, இ பதிவு வைத்திராத பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்பேரில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் குழுவினர் நேற்று மேற்கொண்ட சோதனையில், கொரோனா ஊரடங்கு தடையை மீறி அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் சென்றது தொடர்பாக 1,497 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 319 இருசக்கர வாகனங்கள், 24 ஆட்டோக்கள், 14 இலகுரக வாகனங்கள் மற்றும் 2 இதர வாகனங்கள் என மொத்தம் 359 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், சட்டம் ஒழுங்கு காவல் குழுவினர் நேற்று மேற்கொண்ட வாகனத் தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில், சென்னை பெருநகரில் கொரோனா ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 912 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 1,348 இருசக்கர வாகனங்கள், 65 ஆட்டோக்கள் மற்றும் 33 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 1,446 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 1,946 வழக்குகளும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 188 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

click me!