மாலை அல்ல... இரவில் கரையைக் கடக்கும் நிவர் புயல்.. சூறாவளி காற்று பின்னியெடுக்கும்.. வானிலை மையம் அலர்ட்..!

By Asianet TamilFirst Published Nov 25, 2020, 8:33 AM IST
Highlights

 வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் இன்று இரவு காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

நிவர் புயல் குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “நிவர் புயல் தற்போது தீவிர புயலாக மாறியுள்ளது. தற்சமயம் இப்புயல் தென்மேற்கு வங்கக் கடலில் புதுச்சேரியிலிருந்து 320 கிலோ மீட்டர் தொலைவிலும் சென்னையிலிருந்து 380 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. தற்போது புயல் மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் மெதுவாக நகர்ந்துவருகிறாது.


பிற்பகலில் அதிதீவிர புயலாக மாறி வடமேற்கு திசையில் இருந்து நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்திற்கு இடையே புதுச்சேரிக்கு அருகே இன்று இரவு கரையைக் கடக்கும். அப்போது பலத்த காற்று வீசக்கூடும். மணிக்கு 120 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். திருவாரூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 80 - 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 27-ம் தேதி வரை மழை தொடரும்.
அடுத்து 24 மணி நேரத்திற்கு புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மிக அதிக மழை பெய்யும். சென்னையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ. மீனம்பாக்கத்தில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது.” எனத் தெரிவித்தார். முன்னதாக இன்று மாலை புயல் கரையைக் கடக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஆனால், தற்போது இரவு கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!