தமிழக அரசால் மாணவர்கள் மத்தியில் குழப்பம்... உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பாஜக...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 28, 2021, 07:24 PM IST
தமிழக அரசால் மாணவர்கள் மத்தியில் குழப்பம்... உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பாஜக...!

சுருக்கம்

நீட் தேர்வு பாதிப்புகளை கண்டறிவதற்காக  நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்த தமிழக அரசாணையை ரத்து செய்யக்கோரி தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு,  ஜூன் 10ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது.  நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால், மாற்று வழி குறித்தும், அதை அமல்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அரசாணைக்கு தடை விதிக்க கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், தமிழக பா.ஜ. பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.  அந்த மனுவில்,  நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டம், நாடு முழுவதற்கும் பொதுவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்வியின் தரத்தை மேம்படுத்த 2019ம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது எனவும், அந்த சட்டத்தின் அடிப்படையில், மருத்துவ ஆலோசனை குழுமம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவ கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மருத்துவ ஆணையத்திடமும், ஆலோசனை குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்க வேண்டும் எனவும், அதை மீறும் வகையில் தற்போது தமிழக அரசு குழு அமைத்துள்ளதாகவும், இது அனுமதிக்கத்தக்கதல்ல என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்துக்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலும், தேசிய நலனின் அடிப்படையிலும், நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு, இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது எனவும், ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க ஏதுவாக அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!