கோயில் நகைகளை பிரிக்கவோ, உருக்கவோ தடையில்லை… நீதிமன்ற தீர்ப்பு குறித்து அமைச்சர் சேகர்பாபு ஹேப்பி…!

By manimegalai aFirst Published Oct 29, 2021, 11:09 AM IST
Highlights

கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், இறைவன் சொத்து இறைவனுக்கே என நினைப்பவர்கள் மட்டுமே அறங்காவலர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், இறைவன் சொத்து இறைவனுக்கே என நினைப்பவர்கள் மட்டுமே அறங்காவலர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்க நகைகளில் பயன்படுத்தப்படாமல் உள்ளவற்றை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றும் திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியிருக்கிறது. நகைகளை தங்கக்கட்டிகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்து அதில் கிடைக்கும் வருவாயை கோயில்களுக்கே செலவிடப்படும் என்றும் இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. சமீபத்தில் இந்த திட்ட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

கோயில் நகைகளை உருக்கும் திட்டம் ஒரு பெரிய மோசடி என்று இந்து அமைப்புகள் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தை முழுமையாக எதிர்க்காத பாஜக, ஒரு சில அம்சங்களை கண்டித்தது. முதலில் திட்டத்தை அறிவிக்கும் போது தங்கக்கட்டிகள் மூலம் கிடைக்கும் வருவாய், நலிவடைந்த நிலையில் உள்ள கோயில்களின் வளர்ச்சி பணிகளுக்கு செலவிடப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார். ஆனால் இதற்கு பா.ஜ.க. கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தமிழ்நாடு அரசு தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, அந்தந்த கோயில்களில் உருக்கப்படும் நகைகளின் மூலம் கிடைக்கும் வருவாய் சம்மந்தபட்ட கோயிலுக்கு மட்டுமே செலவிடப்படும் என்று உறுதியளித்தது.

இதனிடையே கோயில் நகைகளை உருக்கும் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள பல ஆலயங்களில் அறங்காவலர்கள் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. அறங்காவலர்கள் இல்லாதபோது நகைகளை பிரித்து எடுப்பது, மோசடிகளுக்கு வழிவகுக்கும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அறங்காவலர்கள் நியமிக்கப்படாத கோயில்களில் நகைகளை உருக்கும் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளும் வரவேற்பு தெரிவித்தன.

இந்தநிலையில், நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை சூளைமேட்டில் உள்ள அங்காளம்மன், சீனிவாசப் பெருமாள் உள்ளிட்ட கோயில்களில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெரிய கோயில், சிறிய கோயில் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

நகைகளை உருக்கும் திட்டம் குறித்த நீதிமன்ற உத்தரவு குறித்து பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, கடந்த காலங்களில் நகைகளை சரிபார்ப்பு பணிகளை கூட செய்யவில்லை. அனைத்து கோயில்களிலும் நகைகளை பிரிப்பதற்கு ஓராண்டு காலம் ஆகும். அறங்காவலர் நியமனம் குறித்து நீதிமன்றம் தீர்ப்புக்கு முன்னரே அதற்கான பணிகளை இந்து சமய அறநிலைத்துறை தொடங்கிவிட்டது. அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக விளம்பரங்களையும் பத்திரிகைகளில் ஏற்கனவே வெளியிட்டுள்ளோம். எனவே அறங்காவலரை நியமித்த பின்னரே நகைகளை உருக்கும் பணிகள் தொடங்கும். அதேவேளையில், நகைகளை பிரிப்பதற்கோ, உருக்குவதற்கோ எந்த தடையும் நீதிமன்றம் விதிக்கவில்லை. அதனால் இந்த தீர்ப்பை மிகவும் மகிழ்ச்சியாக வரவேற்பதாக அமைச்சர் கூறினார்.

அறங்காவலர் நியமனத்தில் திமுக, தி.க., போன்ற அரசியல் பின்புலம் இருக்க கூடாது என்கிற எச்.ராஜா கருத்துக்கு பதிலளித்த அமைச்சர், இறைவன் மீது நம்பிக்கை உள்ளவர்களையும், இறைவன் சொத்து இறைவனுக்கே என்று நினைப்பவர்கள் தான் அறங்காவலர்களாக நியமிக்கப்படுவார்கள். அறநிலையத்துறை மீது ஏதேனும் குற்றம் சொல்ல வேண்டும் என்று எச்.ராஜா இதுபோன்று பேசிவருகிறார் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

click me!