ஊரடங்கால் பரிதாபம்..! தமிழகத்தில் இருந்து ஒடிசாவிற்கு நடந்தே செல்லும் தொழிலாளர்கள்..!

By Manikandan S R SFirst Published May 5, 2020, 2:28 PM IST
Highlights

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள் வேலை இல்லாததால் வருமானம் இழந்து அன்றாட பிழைப்புக்கு திண்டாடி வருகின்றனர். அவர்களை பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்தபோதும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வடமாநில தொழிலாளர்கள் தொடர்ந்து முயன்று வருகின்றனர். 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இன்றைய நிலவரப்படி 46,433 மக்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு 1,578 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. கடந்த மார்ச் 24ம் தேதி முதல் அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு மூன்றாவது முறையாக மே 17ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்க அரசு அறிவித்திருக்கிறது. எனினும் தற்போது தடை உத்தரவில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்திலும் ஊரடங்கு நடைமுறை மிகக் கடுமையாக பின்பற்றப்படுகிறது. கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள் வேலை இல்லாததால் வருமானம் இழந்து அன்றாட பிழைப்புக்கு திண்டாடி வருகின்றனர். அவர்களை பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்தபோதும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வடமாநில தொழிலாளர்கள் தொடர்ந்து முயன்று வருகின்றனர். பலர் தங்கள் மாநிலங்களை நோக்கி நடந்து செல்லவும் தொடங்கியிருக்கின்றனர் 

செங்கல்பட்டு மாவட்டம் திருநீர்மலை அருகே இருக்கும் ஒரு ஹாலோபிளாக் கம்பெனியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு காரணமாக கம்பெனி மூடப்பட்டு இருக்கும் நிலையில் உணவின்றி தவிக்கும் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்ல தீர்மானித்துள்ளனர். அதன்படி சுமார் 20 தொழிலாளர்கள் ஒடிசா மாநிலத்திற்கு தாம்பரம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களின் நிலையறிந்த ஜெயா தொலைக்காட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செய்தியாளர் பத்மநாபன் மற்றும் சிலர் அத்தொழிலாளர்களுக்கு  பழங்கள், பிரட், பிஸ்கட் போன்றவற்றை வழங்கினர் அதை அவர்கள் நெகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்,  பல்வேறு மாநிலங்களிலும் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல ரயில் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் விரைவாக அதை செயல்படுத்த கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

 

click me!