என் உயிருக்கு ஆபத்து… காப்பாத்துங்க… - ஜெ.தீபா ஆடியோ மூலம் கமிஷனரிடம் புகார்

By Asianet TamilFirst Published Aug 6, 2019, 1:26 AM IST
Highlights

அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்ததால் எனக்கு தொடர்ந்து மிரட்டல் வருகிறது. உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் காவல்துறை எனக்கும், கணவர் மாதவனுக்கும் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கமிஷனர் விஸ்வநாதனிடம் ஜெ.தீபா ஆடியோ மூலம் புகார் அளித்துள்ளார்.

அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்ததால் எனக்கு தொடர்ந்து மிரட்டல் வருகிறது. உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் காவல்துறை எனக்கும், கணவர் மாதவனுக்கும் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கமிஷனர் விஸ்வநாதனிடம் ஜெ.தீபா ஆடியோ மூலம் புகார் அளித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அவரின் வாரிசு என்றார். ஆனால், சசிகலா அவரை போயஸ் கார்டன் வீட்டிற்குள் சேர்க்கவில்லை. இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி, `எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை'''' என்ற அமைப்பை தொடங்கினார்.

இந்த பேரவையில் தீபாவின் கார் டிரைவர் ராஜாவுக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டது. இதனால் தீபாவுக்கும் அவரது கணவர் மாதவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து மாதவன் தனிக்கட்சி ஒன்றையும் ஆரம்பித்தார். பின்னர் மாதவனுடன் தீபா சமரசம் செய்து கொண்டு பேரவையை நடத்தி வந்தார்.

இந்நிலையில், "என்னை தொந்தரவு செய்யாதீர்கள்... அரசியலில் இருந்து விலகுகிறேன். இதையும் மீறி தொந்தரவு செய்தால் போலீசில் புகார் செய்வேன்" என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடந்த வாரம் பேஸ்புக் இணையதளத்தில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த பரபரப்பான நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனுக்கு ஜெ.தீபா ஆடியோ மூலம் நேற்று ஒரு புகார் அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:

நான் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமார் பேசுகிறேன். இந்த ஆடியோ மூலம் உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன். அதிகாரப்பூர்வமாக நானே எனது சொந்த முடிவின்படி இதை ஒரு புகாராக தெரிவிக்க விரும்புகிறேன்.

நான் தொடங்கிய பேரவை 2 ஆண்டு காலமாக நடந்து வந்த ஒரு அரசியல் அமைப்பு. அதை தாய் கழகமான அதிமுகவுடன் இணைக்கும் தருவாயில் எனக்கு சில தொந்தரவுகள் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக அந்த பேரவையில் செயல்பட்டு வந்த சிலர் தேவையற்ற வகையில் எனக்கு தொந்தரவு அளித்துக் கொண்டு இரவு, பகலாக போன் செய்வதுடன், வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார்கள். ஒரு பெண் என்றும் பாராமல் 24 மணி நேரமும் எனக்கு தொல்லை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

எனவே, தார்மீக அடிப்படையில் ஒரு தனிநபராக அரசியலில் இருந்து விலகிவிட்ட சூழ்நிலையில் எனது உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தயவுசெய்து காவல்துறை விரைந்து கவனம் செலுத்தி எனக்கும், எனது கணவர் மாதவனுக்கும் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

என்னுடைய உயிர், உடமைகள் மற்றும் அனைத்துவிதத்திலும் பாதிப்படைய வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக 6 பேர் சேர்ந்து, தொடர்ச்சியாக என்னை துன்புறுத்தி டார்ச்சர் செய்து வருகிறார்கள். எங்களுக்கு எந்த நேரமும் அச்சுறுத்தல் இருக்கிறது. எனக்கும், எனது கணவருக்கும், எனது இல்லத்துக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்துகிறேன். என்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நான் தொடர்ச்சியாக சிகிச்சையில் இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன். இந்த நேரத்தில் அரசியலில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

அதிமுக என்ற மக்கள் சக்தியுடைய அமைப்பில் இந்த பேரவை இணைக்கப்பட்டது. அதனால் அதிருப்தியில் இருப்பவர்கள், சிலரது தூண்டுதலின்பேரின் தன்னிச்சையாக செயல்பட்டு என்னை மிரட்டி தொந்தரவு செய்வதால், எல்லா விதத்திலும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளேன். காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

click me!