நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லையெனவும், அதே நேரத்தில் பாஜகவிற்கு ஆதரவு தெரிவிப்பது என ஓ.பன்னீர் செல்வம் அணி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்றோ அல்லது நாளையோ வெளியாகவுள்ளது. இந்தநிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஆளுங்கட்சியான திமுக தங்களது கூட்டணி கட்சிக்கு தொகுதிகளின் எண்ணிக்கையை அறிவித்துவிட்டது. இதனையடுத்து தொகுதி விவரங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட்டு வருகிறது.
அதே நேரத்தில் பாஜகவும் தங்களது அணியை பலப்படுத்த கட்சிகளை இணைத்து வருகிறது. அந்த வகையில் தென் மாவட்டங்களில் வாக்குகளை பெறுவதற்காக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரனை இணைத்துள்ளது. மேலும் வட மாவட்டங்களில் வெற்றி வாய்ப்பை பெற பாமகவை தங்கள் அணிக்கு இழுக்க தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக பாமகவிற்கு 10 இடங்கள் வரை கொடுப்பதற்கு பாஜக தயாராகி விட்டது.
கூட்டணியில் தொடரும் இழுபறி
இந்தநிலையில் கடந்த3 தினங்களாக பாஜகவுடன் ஓ.பன்னீர் செல்வம் அணி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தியது. அந்த வகையில் தென் மாவட்டங்களில் 4 இடங்களை கேட்டுள்ளது. இதே போல டிடிவி தரப்பும் தென் மாவட்டங்களில் 4 இடங்களை குறிவைத்துள்ளது. தற்போது இரண்டு பேரும் ஒரே தொகுதிகளை கேட்பதால் இழுபறி நீடிப்பது தெரிகிறது . மேலும் ஓபிஎஸ் அணிக்கு என தற்போது வரை எந்த சின்னமும் இல்லை. எனவே பாஜக தரப்பில் தாமரை சின்னத்தில் போட்டியிட வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. இதனை ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இரட்டை இலை சின்னத்திற்காக போராடி வரும் நிலையில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஓபிஎஸ் அணி போட்டியில்லை
இதன் காரணமாக வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லையென ஓபிஎஸ் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்க இன்று ஓபிஎஸ் அணியின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பாஜகவிற்கு தேர்தலில் முழு ஆதரவு தெரிவிப்பது என முடிவெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்
அப்பா ஒரு பக்கம்... மகன் மறுபக்கம்.. அதிமுகவா.? பாஜகவா.? முடிவு எடுக்க முடியாமல் திணறும் பாமக