2018, ஆகஸ்ட் மாதம் சென்னையில், பொதுமக்களுக்கு விற்கப்படும் பெட்ரோல் லிட்டர் ரூ.81.60 விற்பனை செய்யப்பட்டது. அதே மாதம் ஏற்றுமதி செய்யப்பட்ட பெட்ரோல் லிட்டர் ஒன்றின் விலை ரூ.32/-. இதில் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் அடைகிறதா? நட்டம் அடைகிறதா? என் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெட்ரோல் விலை - மனோ தங்கராஜ் கேள்வி
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது. இதனையடுத்து பாஜக சார்பாக பல்வேறு அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் பல்வேறு கேள்விகளை எழுப்பி சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
2014-ல்: இந்தியாவில் சுமார் 34 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் இரு சக்கர வாகனங்கள் மட்டும் 21 கோடி. 2014-ல் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 109 டாலராக இருந்த போது, பெட்ரோல் 72 ரூபாய்க்கும், டீசல் 55 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. அதே 2014-ம் ஆண்டில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ரூ. 4,052 கோடி நிகர லாபம் ஈட்டியது. இதில் ரூ.1425.8 கோடி லாபப் பங்கீடாக முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது.
எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டம் அடைகிறதா.?
2023-ல்: ஆனால், 2023-ம் ஆண்டில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் சராசரி விலை வெறும் 82.5 டாலர் மட்டுமே. இருப்பினும் அதிர்ச்சியளிக்கும் விதமாக பெட்ரோல் ரூ.103, டீசல் ரூ.95 க்கும் விற்கப்படுகிறது. செப்டம்பர் 2023-ல் நிறைவடைந்த காலாண்டு நிதி அறிக்கையின்படி இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் ₹5,826.96 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இதே நிறுவனம் மே, 2022-ல் முதலீட்டாளர்களுக்கு பங்கு ஒன்றிற்கு 140 சதவீதம் டிவிடெண்டாக வழங்கியுள்ளது. இந்த லாபப் பங்கீட்டில் பயனடைந்தோரில் சுமார் 14 சதவிகிதம் பேர் வெளிநாட்டினர்; மேலும் 14 சதவிகிதம் பேர் இந்தியாவில் உள்ள தனியார் முதலீட்டு நிறுவனங்கள். இதை போன்று, BPCL நிறுவனம் 2021 மே மாதம் 350% டிவிடெண்ட் வழங்கியுள்ளது. IOCL நிறுவனம் 2021-22 நிதியாண்டில் ₹24,184 கோடி லாபம் ஈட்டி, 105% டிவிடெண்ட் வழங்கியுள்ளது.
2014-ம் ஆண்டிலும் நிறுவனங்களுக்கு நட்டமில்லை, 2023-லும் நட்டமில்லை. ஒவ்வொரு பெட்ரோலிய நிறுவனங்களும், பொதுமக்களின் பணத்தை உறிஞ்சி மலையளவு லாபத்தில் புரளுகின்றன. அப்படியிருக்க பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முடியாததற்கான காரணத்தை நாட்டு மக்களுக்கு விளக்குவாரா பிரதமர் மோடி? கடந்த 2022 டிசம்பரில் மாண்புமிகு ஒன்றிய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மக்களவையில் பேசுகையில், "2022 ஏப்ரல் 6 முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. இதனால் அப்போது எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.27,276 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும், எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் பெட்ரோல் விலையை குறைக்க முடியாது" என்றும் தெரிவித்தார். இதில் எது உண்மை, எது பொய் என்பதை பிரதமர் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.
663 நாள்களுக்குப்பின் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
லாபம் அடைகிறதா? நட்டம் அடைகிறதா?
இது போன்று, பெட்ரோல் டீசலில் 10% எத்தனால் கலக்கப்படுவதாக ஒன்றிய அரசு கூறி வருகிறது. லிட்டருக்கு 10% எத்தனாலின் விலை சுமார் ரூ.4/- மட்டுமே. எனில், அதற்கேற்ப பெட்ரோல் டீசல் விற்பனை விலை குறைக்கப்படாதது ஏன்? 2023 பெப்ரவரி முதல் நாடு முழுவதும் 11 மாநிலங்களில் E20 எனப்படும் 20% எத்தனால் கலந்த எரிபொருள் விற்பனை துவங்கியிருக்கிறது. எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்துவதால் BSIV -ற்கு முந்தய வாகனங்களின் என்ஜின், எரிபொருள் கடத்தும் உபகரணங்கள் பழுதடைந்து பண இழப்பு ஏற்படுவதுடன், அதிக புகையை வெளியிட்டு மாசுபாட்டை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய நிறுவனங்கள் கச்சா எண்ணெயை விலைக்கு வாங்கி அதனை சுத்திகரித்து, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஈராக் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியத்தை ஏற்றுமதி செய்கிறது. ஏற்றுமதியில் இந்தியா 10-வது பெரிய நாடாகும். 2018, ஆகஸ்ட் மாதம் சென்னையில், பொதுமக்களுக்கு விற்கப்படும் பெட்ரோல் லிட்டர் ரூ.81.60 விற்பனை செய்யப்பட்டது. அதே மாதம் ஏற்றுமதி செய்யப்பட்ட பெட்ரோல் லிட்டர் ஒன்றின் விலை ரூ.32/-. இதில் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் அடைகிறதா? நட்டம் அடைகிறதா?
மோடி விளக்கம் அளிப்பாரா.?
எத்தனால் கலப்பு, சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கம், வெளிநாடுகளுக்கு எரிபொருள் ஏற்றுமதி செய்யப்படும் விலை, பெட்ரோலிய விற்பனை நிறுவனங்களின் லாபம் என எதிலும் பொது நலனும் இல்லை, பொதுமக்களுக்கு பயனும் இல்லை. பொதுமக்களின் பணத்தில் இயங்கும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அந்நிய நாட்டு முதலீட்டாளர்களுக்கும், தனியார் பண முதலைகளுக்கும் லாபம் ஈட்டிக் கொடுப்பதற்காக, எரிபொருள் விற்பனையின் மூலம் பொதுமக்களிடம் இருந்து பணத்தை சுரண்டுகிறதா? மாதாமாதம் மான்கிபாத் மூலம் உரையாற்றும் பிரதமர், பெட்ரோல் விலையின் மர்மத்தை வெளிப்படையாக பேசாதது ஏன்? நாட்டு மக்களுக்கு பிரதமர் விளக்கமளிப்பாரா? என மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படியுங்கள்