
சென்னை புரசைவாக்கம், போரூர், குரோம்பேட்டை, தியாகராயர் நகர் பகுதிகளில் உள்ள பிரபல வணிக நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
1970-ம் ஆண்டு சாதாரண பாத்திரக் கடையாகத் துவங்கப்பட்ட சரவணா ஸ்டோர்ஸ் இன்று பல்வேறு கிளைகளுடன் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக உருவெடுத்துள்ளது. சரணா ஸ்டோர்ஸ் நிறுவனமானது சென்னையில் தியாகராய நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர், பாடி, சோழிங்கநல்லூர் மற்றும் உஸ்மான் சாலையில் என 7 கடைகள் இயங்கி வருகிறது.
இந்நிறுவனமானது மதுரை, திருநெல்வேலி மற்றும் கோவையில் மிகப்பெரிய கடைகளைக் கொண்டுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் இந்த நிறுவனமானது மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரில் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் சரவணா செல்வரத்தினம் கடைகளையும் நடத்தி வருகிறது. வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள், ஆடைகள், ஆபரணங்கள் விற்பனையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக உருவெடுத்துள்ளது. பலரும் வியந்து பார்க்கும் சரவணா ஸ்டோர் வளர்ச்சி கண்டுள்ளது.
இந்நிலையில், சென்னை புரசைவாக்கம், போரூர், குரோம்பேட்டை, தியாகராயர் நகர் பகுதிகளில் உள்ள பிரபல வணிக நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. வரி ஏய்பு, கணக்கில் வராத முதலீடு உள்ளிட்ட புகாரை தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. சோதனை நடைபெற்று வருவதால் கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட வில்லை.