முடிவுக்கு வரும் நீ..ண்ட விடுமுறை காலம்... தமிழகத்தில் 19 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு..!

By Asianet TamilFirst Published Nov 1, 2021, 8:02 AM IST
Highlights

கடந்த 19 மாதங்களாக வீட்டில் இருந்தப்படியே ஆன்லைன் வகுப்புகள் அல்லது கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி பயின்றுவந்த மாணவர்கள், நீ...ண்ட காலத்துக்குப் பிறகு பள்ளிக்கு செல்கிறார்கள்.

தமிழகத்தில் 19 மாதங்களுக்குப் பிறகு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. 

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் சீனாவிலிருந்து இருந்து கிளம்பிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவியது. இந்தியாவில் முதல் கொரோனா கேஸ் 2020 ஜனவரி இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், கொரோனா தொற்று தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், 2020 மார்ச் 24 அன்று நாடு முழுவதும் பொது முடக்கத்தை பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. அந்தக் கல்வியாண்டின் இறுதியில் பள்ளிகள் மூடப்பட்டதால், முழு ஆண்டு தேர்வு இல்லாமலேயே மாணவர்கள் தேர்ச்சி அடைந்ததாக தமிழக அரசு அறிவித்தது.

ஆனால், கல்வி ஆண்டு தொடங்கும் 2020 ஜூனிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பள்ளிகள் இயங்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது. என்றபோதிலும் பிறகு 2020 டிசம்பரில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புகள் வரையில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், 2021-ஆம் ஆண்டு மார்ச்சில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமானதையடுத்து பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டன. கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் ஜூலையில் குறையத் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி திறக்கப்பட்டன. கடந்த இரு மாதங்களாக இப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

பின்னர் தமிழக  அரசின் தீவிர ஆலோசனைக்குப் பிறகு நவம்பர் 1-ஆம் தேதி முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று தமிழகத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கடந்த 19 மாதங்களாக வீட்டில் இருந்தப்படியே ஆன்லைன் வகுப்புகள் அல்லது கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி பயின்றுவந்த மாணவர்கள், நீ...ண்ட காலத்துக்குப் பிறகு பள்ளிக்கு செல்கிறார்கள். பள்ளிகள் திறக்கப்படுவதால் கொரொனா முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் பள்ளிகளில் எடுக்கப்பட்டுள்ளன.

கிருமி நாசினிகளைக் கொண்டு பள்ளிகள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன. பள்ளிக்கு வரும் மாணவர்கள் கிருமி நாசினிகள் வழங்கப்பட உள்ளன. முகக் கவசம் அணியாத மாணவர்களுக்கு அது வழங்கப்படும். இன்று பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்கப்படுவார்கள் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். வட கிழக்குப் பருவ மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களைத் தவிர்த்து, பிற மாவட்டங்களைச்சேர்ந்த மாணவர்கள் இன்று பள்ளிக்கு செல்ல இருக்கிறார்கள். பள்ளி செல்லும் ஆவலிலும் தங்கள் நண்பர்கள், ஆசிரியர்களைக் காணும் மகிழ்ச்சியிலும் மாணவர்கள் இன்று பள்ளிக்கு செல்கிறார்கள்.

click me!