#Heavy Rain: வெச்சு வெளுக்கப்போகுதாம் கனமழை.. 2017ம் ஆண்டை ஞாபகப்படுத்தி எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்.!

By vinoth kumarFirst Published Nov 24, 2021, 10:29 AM IST
Highlights

வடகிழக்கு பருவ மழை சீசனில் இதற்கு முன் பெய்த மழை போல இந்த மழை இருக்காது. சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் இந்த மழை ஒருநாள் மட்டும் பெய்துவிட்டு பின் விட்டுவிடாது.

2017ல் நவம்பர் முதல் வாரம் மழை பெய்தது நியாபகம் இருக்கிறதா? அதுபோல தமிழ்நாட்டில் மழை பெய்ய போகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடகிழக்கு பருமழை தமிழகத்தில் தற்போது தீவிரமடைந்துள்ளது. வங்கக்கடலில் ஏற்கனவே இரண்டு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் அடுத்தடுத்து உருவாகி வலுவடைந்து சென்னைக்கு அருகே கரையை கடந்து சென்றன. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால், கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தெற்கு வங்கக் கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மேற்கு, வடமேற்கு திசையில் தமிழகக் கரையை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக இன்று நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, குமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும். பிற தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யும்.

வரும் 25-ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன முதல் மிக கனமழை பெய்யும். சென்னை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக பிரதீப் ஜான் இந்த மழை ஒருநாள் மட்டும் பெய்துவிட்டு பின் விட்டுவிடாது என தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- இந்த வடகிழக்கு பருவ மழை சீசனில் இதற்கு முன் பெய்த மழை போல இந்த மழை இருக்காது. சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் இந்த மழை ஒருநாள் மட்டும் பெய்துவிட்டு பின் விட்டுவிடாது.

இது ஒருநாள் மழையாக இருக்க போவது இல்லை. மாறாக மழை பிரேக் எடுத்து பிரேக் எடுத்து 4  முதல் 5 நாட்களுக்கு பெய்ய போகிறது. 2017ல் நவம்பர் முதல் வாரம் மழை பெய்தது ஞாபகம் இருக்கிறதா? அதுபோல தமிழ்நாட்டில் மழை பெய்ய போகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால், பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

click me!