மருந்துக் கடை உரிமையாளர்களே உஷார்... சுகாதாரத்துறை செயலர் விடுத்த எச்சரிக்கை...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 12, 2021, 7:30 PM IST
Highlights

சானிடைர், மாஸ்க் உள்ளிட்ட 15 நோய் தடுப்பு பொருட்களுக்கு அதிகபட்ச விலையை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. 

கொரோனா பேரிடர் காலத்தைப் பயன்படுத்தி கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட உயிர் காக்கும் மருத்துவ பொருட்கள் கொள்ளை லாபத்திற்கு விற்கப்படுவதை தவிர்க்கும் விதமாக தமிழக அரசு நேற்று ஒரு அரசாணை பிறப்பித்தது. அதன் படி சானிடைர், மாஸ்க் உள்ளிட்ட  15 நோய் தடுப்பு பொருட்களுக்கு அதிகபட்ச விலையை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. 

இந்நிலையில் முகக்கவசம் சானிடைசர் போன்றவை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். உலகளாவிய இந்த தொற்று சமயத்தில் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளார். 

தனியார் மருத்துவமனைகளில் ஏழை, எளிய மக்களிடம் இஷ்டத்திற்கு கட்டணம் வசூலிக்க கூடாது. மருத்துவமனை நஷ்டத்திலும் இயங்கக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தான் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர்,  அதேநேரத்தில் மருந்து கடைகளும் நஷ்டத்திலும் இயங்க கூடாது என்பதற்காக விலை நிர்ணயம் செய்யப்பட்டதாகவும், அதே சமயத்தில் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் நோக்கம் வேண்டாம் என்றும் தெரிவித்தார். 

உயிர்கொல்லி நோயுடன் போராடிக்கொண்டிருக்கும் சமயத்தில், அரசின் விதிகளை மீறி செயல்பட்ட தனியார் ஆய்வகங்கள், சில மருத்துவமனைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். தொடர்ந்து தவறு செய்பவர்கள் மீது புகார் அளிக்கப்படும் பட்சத்திலும், ஆய்வின் போது தவறு நடப்பது உறுதி செய்யப்பட்டாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

click me!