கொரோனா கோரத்தாண்டவம்... சென்னை, செங்கல்பட்டு, கோவையில் முழு ஊரடங்கு அமலாக வாய்ப்பு?

By vinoth kumarFirst Published Apr 28, 2021, 12:24 PM IST
Highlights

நாட்டில் கொரோனா பாதிப்பு 15 சதவீத்திற்கு மேல் உள்ள 150 மாவட்டங்களில் அடுத்த சில வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாட்டில் கொரோனா பாதிப்பு 15 சதவீத்திற்கு மேல் உள்ள 150 மாவட்டங்களில் அடுத்த சில வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் கொரோனா 2வது அலை பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா, குஜராத், அரியானா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் நிலைமை மோசமாக இருக்கிறது. அங்கு கடந்த 2 வாரங்களை ஒப்பிடும்போது 15 சதவீதத்துக்கும் அதிகமாக பாதிப்பு உயர்ந்து உள்ளது.

இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக நேற்று மத்திய சுகாதாரத்துறை மற்றும் உயர்மட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது தொற்று பரவல் அதிகமாக உள்ள மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கை கொண்டு வரலாம் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. அதாவது 15 சதவீதத்துக்கும் மேல் பரவல் உள்ள 150 மாவட்டங்களிலும் சில தளர்வுகளை மட்டும் அறிவித்து விட்டு முழுமையான ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று கூறினார்கள். இருப்பினும், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசனை செய்த பிறகே முடிவு எடுக்கப்படும். 

கொரோனா பரவல் சங்கிலியை தடுக்க அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்களில் கடுமையான ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என ஆய்வுகள் கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 15 சதவீத்திற்கு மேல் கொரோனா பாதிப்பு இருப்பதால் இந்த பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளது. 

click me!