மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி... தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 28, 2021, 7:47 PM IST
Highlights

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரண உதவிகள் குறித்த விவரங்கள் அடங்கிய சமீபத்திய அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கக் கோரி மூன்று அமைப்புகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கண்பார்வையில்லாத மாற்றுத் திறனாளிகள், ரயில்களில் பென்சில், புத்தகம் போன்றவற்றை விற்பனை செய்து வாழ்வு நடத்தி வருகின்றனர் எனவும், அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கக் கோரி அரசுக்கு விண்ணப்பித்தும் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை என்றனர். மேலும், 5 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி கோரிய நிலையில் ஆயிரம் ரூபாய் மட்டுமே மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டதாகவும், அதேசமயம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும், சாதாரண மக்களுக்கு 4 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 449 மாற்றுத் திறனாளிகளுக்காக 58 கோடியே  33 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலை குறித்து அறிக்கை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவகாரத்தில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும், மாற்றுத் திறனாளிகளுக்கு என்ன நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன, எந்தெந்த வகையினருக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

click me!