காத்து வாங்கும் காசிமேடு மீன் சந்தை… கூவி, கூவி அழைத்தாலும் வாங்க ஆள் இல்லாததால் வியாபாரிகள் ஏமாற்றம்…!

By manimegalai aFirst Published Sep 26, 2021, 8:26 AM IST
Highlights

காசிமேடு மீன் சந்தையில் வரத்தும் அதிகரித்தாலும் மீன்களை வாங்க ஆள் இல்லாததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

காசிமேடு மீன் சந்தையில் வரத்தும் அதிகரித்தாலும் மீன்களை வாங்க ஆள் இல்லாததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சென்னையில் காசிமேடு மீன் சந்தை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் திருவிழா போல் மக்கள் கூட்டம் அலைமோதும். சிறு வியாபாரிகள், உணவகங்களுக்கு மொத்தமாக மீன்கள் வாங்குவதோடு, விரும்பிய மீன்களை வாங்க பொதுமக்களும் காசிமேடு மீன் சந்தைக்கு படையெடுப்பார்கள்.

கடந்த மாதம் முழுவதும் களைகட்டியிருந்த காசிமேடு மீன் சந்தை தற்போது புரட்டாசி மாதம் என்பதால் காற்று வாங்குகிறது. இதனால், கடந்த 2 மாதங்களாக ஏறுமுகத்தில் இருந்த மீன்களின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. புரட்டாசி மாதத்தில் இரண்டு வாரங்கள் ஓடியும், மீன் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ரூ.1,200 க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வஞ்சிரம் தற்போது சரிபாதியாக குறைந்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.500-க்கு விற்கபட்ட நெத்திலி ரூ.150-க்கும், ரூ.600-க்கு விற்பனையான சங்கரா மீன் ரூ.200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பாறை மீன் ஒரு கிலோ ரூ.600-ல் இருந்து ரூ.250 ஆகவும், இறால் 500 ரூபாயிலிருந்து 250 ரூபாயாகவும் குறைந்துள்ளது. புரட்டாசியில் பெருமாளை வழிபடும் இந்து மதத்தினர் வீடுகளில் அசைவத்தை தவிர்த்து விடுவார்கள். வழக்கத்தை விட மீன் வரத்து அதிகம் இருந்தாலும் குறைந்த விலைக்கு கூட விற்பனையாகாததால் மீனவர்களும், வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.

click me!