20 வருஷத்துக்கு முன்னாடி வைச்ச அரியர்ஸ் இன்னும் பாக்கி இருக்கா.? அண்ணா பல்கலைக்கழகத்தின் குஷியான அறிவிப்பு!

By Asianet TamilFirst Published Sep 24, 2021, 10:54 PM IST
Highlights

பொறியியல் கல்லூரிகளில் 20 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பாக சிறப்புத் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
 

தமிழக பொறியியல் கல்லூரிகளில் 2001-ம் ஆண்டு முதல் படித்து, அரியருடன் தேர்ச்சி பெறாமல் உள்ளவர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்க சிறப்புத் தேர்வுகளை நடத்த திட்டமிட்டது. அதன்படி, கடந்த 2019-இல் இந்தச் சிறப்புத் தேர்வு வழக்கமான பருவத் தேர்வோடு சேர்த்து நடத்தப்பட்டது. ஆனால், 2020-இல் திட்டமிடப்பட்ட மற்றொரு தேர்வு கொரோனா வைரஸ் தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு நவம்பர்- டிசம்பரிலும், 2022 ஏப்ரல் - மேயிலும், 2022 நவம்பர்- டிசம்பரிலும் சிறப்புத் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “அண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவின் முடிவின்படி, பொறியியல் படிப்பில் நீண்ட ஆண்டுகளாக அரியர் வைத்திருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பாக இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த சிறப்புத் தேர்வை எழுத அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் விவரங்களை அறிந்து, விண்ணப்பிக்கலாம். சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், தேர்வு எழுதவும், வழக்கமான தேர்வுக் கட்டணத்துடன் ஒவ்வொரு தாளுக்கும் கூடுதலாக ரூ.5,000 செலுத்த வேண்டும்.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 24 முதல் விண்ணப்பிக்கலாம். தேர்வு நடைபெறும் முறை, தேதி, தேர்வு மையங்கள் ஆகிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் www.coe1annauniv.edu என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி அக்டோபர் 4 ஆகும்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!