சென்னையில் போதைக்கு அடிமையான நான்கு பேரிடம் சண்டை போட்டு தம்பதியை காப்பாற்றிய பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சென்னை மெரினா கடற்கரையில் குறிப்பாக பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு எதிராக உள்ள பகுதியில் நேற்று முன் தினம் பொதுமக்கள் அதிகம் வந்த வண்ணம் இருந்துள்ளனர். அப்போது காதல் ஜோடி ஒன்று இருசக்கர வாகனத்தில் கடற்கரைக்குள் வந்துள்ளனர்.
காதல் ஜோடியின் இருசக்கர வாகனத்தை, இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர் இடித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் தவறாக நடந்துடன், அவர்களைத் தாக்கி செல்போனையும் பறித்துள்ளனர். அப்போது அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் கலா செல்போன் பறித்துக் கொண்டு தகராறில் ஈடுபட்ட மர்ம நபர்களை தனியாக தடுத்து நிறுத்த முயன்றுள்ளார்.
காவலர் கலா விசாரிக்க முயன்றபோது , இளைஞர்கள் போதையில் தகராறில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரிக்க வந்த காவலர் கலாவையும் தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது. உடனே கலா அருகே உள்ள காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.
உடனே நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. பின்னர் காவலர் கலா பாதிக்கப்பட்ட தம்பதியுடன் மெரினா காவல் நிலையத்திற்கு சென்றார். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளனர்.
குற்றத்தில் ஈடுபட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் குற்றவாளிகள் பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. பெண் காவலரின் இந்த செயலுக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இதையும் படிங்க..பெருமாள் கோவிலில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதா? அன்று தஞ்சாவூர்! இன்று சென்னையா? கொதிக்கும் ஆர்வலர்கள்