தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000 தர முடியாததற்கு முந்தைய அதிமுக ஆட்சி தான் காரணம் என்று திமுக மூத்த எம்பி டிஆர் பாலு குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை: தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000 தர முடியாததற்கு முந்தைய அதிமுக ஆட்சி தான் காரணம் என்று திமுக மூத்த எம்பி டிஆர் பாலு குற்றம்சாட்டி உள்ளார்.
சட்டமன்ற தேர்தலின் போது திமுகவின் பிரதான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக அறியப்பட்டது. குடும்ப தலைவிகளுக்கு மாதாமாதம் 1000 ஆயிரம் அளிக்கப்படும் என்ற வாக்குறுதி பெரும் வரவேற்பை பெற்றது.
இந் நிலையில் வில்லிவாக்கம் அருகே அயப்பாக்கம் ஊராட்சி கரிய மாணிக்கம் கோவில் அருகில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுகவின் மூத்த எம்பி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் இப்போது நல்லாட்சி நடந்து வருகிறது. கடந்த ஆட்சியின் போது நாம் விடுத்த கொரோனா நிவாரண நிதி, கூடுதல் தடுப்பூசிகள் ஆகிய கோரிக்கைகளை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை.
ஆனால் ஸ்டாலின் முதல்வராக வந்தவுடன் கூடுதல் தடுப்பூசிகளை மத்திய அரசிடம் இருந்து பெற்றோம். நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்பட்டது. முன்பிருந்த அதிமுக ஆட்சியால் கஜானா காலியாகி விட்டது. ஆகவே தான் குடும்ப தலைவிகளுக்கான உரிமை தொகையான மாதம் ரூ.1000 திட்டம் தொடங்கப்படவில்லை.
வாக்குறுதி அளித்தபடி விரைவில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அயப்பாக்கத்தில் உள்ள மக்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறினார்.