
சென்னை மாநகர காவல்துறை மூன்றாகப் பிரிக்கப்பட்டதையடுத்து, தாம்பரம் மாநகர காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி ரவியும், ஆவடி மாநகர காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி சந்தீப் ராய் ரத்தோரும் நியமிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது முதல்வர் ஸ்டாலின் காவல்துறை தொடர்பான ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, புதிய மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ள தாம்பரம் மற்றும் ஆவடியில் புதிய காவல் ஆணையர்கள் நியமிக்கப்படுவர்கள் என்றும், ஆவடி, தாம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு தனித்தனி காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இதையடுத்து, தாம்பரம், ஆவடிக்கு புதிய காவல் ஆணையர்களை நியமித்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்ட அறிவிப்பில்;-
* சென்னை ஏடிஜிபியாகப் பதவி வகித்து வரும் எம்.ரவி, தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சென்னை அமலாக்கப் பிரிவுஏடிஜிபியாகப் பதவி வகித்து வரும் சந்தீப் ராய் ரத்தோர், ஆவடி மாநகரக் காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சென்னை பொருளாதாரக் குற்றத் தடுப்புப்பிரிவு ஐஜியாகப் பதவி வகித்து வரும் அபின் தினேஷ் மோதக், அடுத்த உத்தரவு வரும் வரை அப்பிரிவின் ஏடிஜிபி பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.