நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் அதிமுக மற்றும் திமுக நேர்காணல் நடத்தி வருகின்றனர்.
தேர்தல் பணி தீவிரம்
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முழுவதுமாக முடிவடைந்துள்ளது. இன்னும் எந்த எந்த கட்சிக்கு எந்த எந்த இடம் என்பது மட்டுமே முடிவு செய்யப்படவுள்ளது.
அதே நேரத்தில் அதிமுகவுடன் தற்போது வரை தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளது. இந்த கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனிடையே திமுக மற்றும் அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
விருப்ப மனு தாக்கல்
இதன் படி மக்களவைத் தேர்தலில் தமிழகம் 39 தொகுதிகள், புதுச்சேரி ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிட 2,984 மனுக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டடுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் நேர்காணலை தொடங்கியுள்ளார். ஒவ்வொரு தொகுதியாக அழைத்து நேர்காணல் செய்யப்படுகிறது. அப்போது தொகுதியில் வெற்றி வாய்ப்பு, கள நிலவரம், திமுகவிற்காக பங்கேற்ற போராட்டங்கள், தேர்தல் செலவு தொடர்பாக கேள்விகள் கேட்கப்படுவதாக கூறப்படுகிறது.
அதிமுக நேர்காணல்
இதே போல நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தமிழகம் மற்றும் புதுவை உட்பட 40 தொகுதிகளுக்கும் இன்றும் நாளையும் நேர்காணல் நடைபெறுகிறது. இன்று காலை திருவள்ளூர் (தனி), வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஶ்ரீபெரம்பத்தூர், காஞ்சிபுரம் ( தனி) , அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி தொகுதிகளுக்கும் பிற்பகல் 2:30 மணிக்கு மேல்,
திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம் ( தனி), கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி ( தனி ) மற்றும் கோயம்புத்தூர் தொகுதிகளுக்கு நேர்காணல் நடத்தப்படவுள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கு நாளையும் நேர்காணல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு, எதிர்கட்சி பலம் தொடர்பான கேள்விகள் கேட்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்
தலைமைத் தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா ஏன்? தப்பா இருக்கே.. சந்தேகம் எழுப்பும் கிருஷ்ணசாமி.!