Tamilanadu Rain | வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. ஒரு வாரம் தமிழ்நாட்டை வெச்சு செய்யப்போகும் கனமழை..!

By manimegalai aFirst Published Nov 15, 2021, 9:31 AM IST
Highlights

Tamilnadu Rain | நவம்பர் 18-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை அடையக்கூடும். அரபிக் கடலில் அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதல் கனமழை அடுத்த வாரமும் தொடரும் வாய்ப்புள்ளது.

நவம்பர் 18-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை அடையக்கூடும். அரபிக் கடலில் அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதல் கனமழை அடுத்த வாரமும் தொடரும் வாய்ப்புள்ளது.

#TamilnaduRain தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகளால், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திராவின் ஒரு சில பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. வங்கக் கடலில் கடந்த வாரத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியியால் சென்னை உட்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு வாரம் கனமழை கொட்டியது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால் இடைவிடாது மழை பெய்தது. இதன் காரணமாக தலைநகர் சென்னை வெள்ளத்தில் தத்தளித்தது. பல இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாத நிலையில் அடுத்த மழை மிரட்ட வந்துள்ளது.

வங்கக் கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த வாரம் சென்னை அருகே கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 50 கி.மீ வேகத்தில் தரைக்காற்றுடன் கனமழையும் கொட்டியதால் நகரமே வெள்ளக்காடானது. பல்வேறு மாவட்டங்களில் இதன் தாக்கம் எதிரொலித்ததால் அணைகள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மேட்டூர் அணையும் நிரம்பி வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இரண்டு வாரங்களில் பெய்த கனமழையால் காவிரி டெல்டா மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விளைநிலங்கள் கடல் போல் காட்சியளிக்கிறது.

இந்தநிலையில் தான் வடக்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடலில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இதன் எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 நாட்களாக கனமழை வெளுத்து வாங்குகிறது. நீடிக்கும் கனமழையால் குமரி மாவட்டமே தண்ணீரில் தத்தளிக்கிறது. தண்ணீர் வெளியேற வழியில்லாமல் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகள் முழுவதும் நிரம்பி தாமிரபணி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் ஆறுகளின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சாலைகள் ஆறுகளாக காட்சியளிப்பதால் மீட்புப் பணிகளை கூட மேற்கொள்ள முடியவில்லை. தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் ரயில் சேவையும் முடங்கியுள்ளது. தண்ணீரில் தத்தளிக்கும் குமரி மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்யச் செல்கிறார்.

இந்தநிலையில் வட அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வட அந்தமான் கடல் பகுதி,  மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த கற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக் கடலை வந்தடையும். அதனைத் தொடர்ந்து நவம்பர் 17 ஆம் தேதி மேற்கு மற்றும் மத்திய வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு  நவம்பர் 18 ஆம் தேதி தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை அடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கன்னியாகுமரியில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறுவதால் தமிழ்நாட்டில் நவம்பர் 18ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் 20 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் மழை ஓய்ந்துவிடும் என்றும் கூற முடியாத நிலையில் வானிலை மையத்தின் மேலும் ஒரு அறிவிப்பு உள்ளது. அதாவது வரும் 17-ஆம் தேதி, அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்தூள்ளது. தெற்கு மஹாராஷ்டிரா - கோவா கடல் பகுதிகள் இடையே இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அந்த மையம் கணித்துள்ளது.

அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. வங்கக் கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஆந்திராவை நோக்கி நகரும் என்பதால் சென்னையில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சென்னையின் பல பகுதிகளில் தண்ணீர் வடியாத நிலையில் வங்கக் கடலில் நிலவும் வானிலையானது சென்னைவாசிகளை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

click me!