#ChennaiRains கரையைக் கடந்த தாழ்வு மண்டலம். ரெட் அலெர்ட் வாபஸ். ஆனாலும் இந்த மாவட்டங்களில் கவனம் மக்களே..!

By manimegalai aFirst Published Nov 19, 2021, 8:00 AM IST
Highlights

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்க தொடங்கியபோது மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. காற்றுடன் கனமழையும் கொட்டியதால் இந்த அதிகாலையானது சென்னைவாசிகளுக்கு திகிலாகவே அமைந்தது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்க தொடங்கியபோது மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. காற்றுடன் கனமழையும் கொட்டியதால் இந்த அதிகாலையானது சென்னைவாசிகளுக்கு திகிலாகவே அமைந்தது.

வடக்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் எதிரொலியாக தமிழ்நாட்டின் தென் கோடியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 3 நாட்கள் இடைவிடாது கனமழை கொட்டியது. குமரி வெள்ளத்தில் தத்தளிக்க, தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் கனமழை பெய்தது. ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பின. பல்வேறு ஊர்களில் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் இன்று வரை பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. ஆறுகள், குளங்களின் கரைகள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் தத்தளித்து வருகின்றன. லட்சக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி வருகிறது.

இந்தநிலையில் வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறாது என்றும், அது புயலாக மாற வாய்ப்பே இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி வந்தது. ஆனால் இவற்றிற்கு நேர் மாறாக நேற்று காலையில் திடீரென வங்கக் கடலில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்றாக வானிலை மையம் அறிவித்தது. அடுத்த மூன்று மணி நேரத்தில் அது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னையை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் கூறியது. இதனால் சென்னைவாசிகள் கலக்கத்தில் ஆழ்ந்தனர். நேற்று காலை முதலே சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை விட்டு விட்டு கொட்டியது. சென்னையின் புறநகர்களிலும் கனமழை கொட்டியதால் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

இந்தநிலையில் சென்னையை நோக்கி நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை கரையைக் கடந்தது. அதிகாலை 3 மணிக்கும் 4 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் சென்னை புதுவைக்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தாழ்வு மண்டலம் கரையைக் கடந்த போது மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. கனமழையும் கொட்டியதால் இன்று அதிகாலை சென்னைவாசிகள் திகிலுடன் எதிர்நோக்கி இருந்தனர். சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் நேற்றிரவு விட்டு விட்டு கனமழை பெய்துள்ளது. சென்னை அருகே கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழக பகுதிகளில் தற்போது  நிலைகொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து வலுவிழக்க கூடும். என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததால் தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட ரெட் அலெர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஆனாலும், அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பிற இடங்களில் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும்.தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய வட தமிழக கடற்கரை மற்றும் ஆந்திர கடற்கரைக்கு இன்று மதியம் வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக: புதுச்சேரி - 19 செ.மீ, கடலூர் 14 செ மீ, ராணிப்பேட்டை 11 செ மீ, தாம்பரம் - 5 செ.மீ நுங்கம்பாக்கம் - 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

click me!