உயிரை எடுக்கும் ஆன்லைன் ரம்மி.. பணம் இழந்த ஓட்டுநர் தற்கொலை.. அனாதையாக நிற்கும் மனைவி, பச்சிளம் குழந்தை.!

By vinoth kumarFirst Published Nov 18, 2021, 1:32 PM IST
Highlights

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தாய் மற்றும் மனைவி நீண்ட நேரம் செல்போனில் தொடர்பு கொண்ட போது முருகன் எடுக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்து வீட்டுக்கு வந்து பார்த்த போது தூக்கில் முருகன் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறினர். 

சென்னை சேலையூரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த கார் ஓட்டுநர் முருகன்(30) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆன்லைன் சூதாட்டம் தமிழகத்தை அச்சுறுத்தும் சொல்லாக மாறிவிட்டது. ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் பட்டியல் அதிகரித்த வண்ணம் உள்ளது. பலரும் தங்களின் செல்போன் வழியே மறைமுகமாக விளையாடி வந்த இந்த ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்கள் தற்போது பலரின் உயிரை எடுக்கும் ஒன்றாக மாறிவிட்டது. இதனை முழுமையாக தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த வண்ணம் உள்ளது. 

இந்நிலையில், தாம்பரம் அடுத்த ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன்(30). இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஒராண்டு முன்புதான் பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றிருந்த பிரியாவிற்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக முருகன் இருந்துள்ளார். இதனால், இவர் எந்நேரமும் செல்போன் கையுமாக இருந்துள்ளார். இதில் சிறிதளவு பணத்தைப் பெற்றுள்ளதால், மேலும் பணம் கிடைக்கும் என்ற ஆசையில் தனது நண்பர்கள், உறவினர்களின் நகை, பணம் வாங்கிக்கொண்டு ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்துள்ளார். 

இதனால், கடும் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தாய் மற்றும் மனைவி நீண்ட நேரம் செல்போனில் தொடர்பு கொண்ட போது முருகன் எடுக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்து வீட்டுக்கு வந்து பார்த்த போது தூக்கில் முருகன் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறினர். 

இதுதொடர்பாக சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இளைஞரின் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் ரம்மியால் இளைஞர் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாக இருந்து வருகிறது.  அரசு முழுமையாக ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை  செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

click me!