Chennai Rain: அதி கனமழை எச்சரிக்கை.. உணவுப்பொருட்களை இருப்பு வைச்சுக்குங்க.. உஷார் செய்யும் சென்னை மாநகராட்சி!

By Asianet TamilFirst Published Nov 17, 2021, 8:34 PM IST
Highlights

2015-ஆம் ஆண்டில் சென்னை வெள்ளத்துக்குக் காரணமான செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளவு 24 அடியாகும். தற்போது ஏரியில் 21 அடிக்கும் அதிகமாக தண்ணீர் உள்ளது. இதேபோல புழல் ஏரியிலிருந்தும் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் நாளை அதிகன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், உணவுப் பொருட்கள், பால், தண்ணீரை இரு நாட்களுக்கு இருப்பு வைத்துக்கொள்ளும்படி பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் கடந்த 6 மற்றும் 11-ஆம் தேதிகளில் 20 செ.மீ.க்கும் அதிகமாக பெய்த கன மழையால் சென்னை மாநகரமே வெள்ளக் காடானது. தி.நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், கே.கே. நகர், கொளத்தூர், வேளச்சேரி, அம்பத்தூர் மற்றும் தென்சென்னையின் புற நகர்ப் பகுதிகள், வடசென்னையின் புறநகர்ப் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. சென்னையில் கடந்த 5 நாட்களாக மழை பெய்யாத நிலையில், தேங்கிய வெள்ள நீர் பெரும்பாலான பகுதிகளில் வடிந்துவிட்டது.

இந்நிலையில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் இன்று இரவு கன மழையும், நாளை அதி கன மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், மீண்டும் சென்னையில் வெள்ளப் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை மாநகராட்சியும் அரசு நிர்வாகமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள ஏரிகளிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன. செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று காலை வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது அது 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  2015-ஆம் ஆண்டில் சென்னை வெள்ளத்துக்குக் காரணமான செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளவு 24 அடியாகும். தற்போது ஏரியில் 21 அடிக்கும் அதிகமாக தண்ணீர் உள்ளது. இதேபோல புழல் ஏரியிலிருந்தும் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே பெய்த மழை அளவுக்கு பெய்தால், வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதால், சென்னை மாநகராட்சிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதி கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை மக்கள் தங்களுக்கு தேவையான குடிநீர், பால், உணவு, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை இரு நாட்களுக்கு இருப்பு வைத்துக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 600-க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் மாநகராட்சி சார்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

click me!