
பரோட்டா சாப்பிட்டு விட்டு தூங்கிய வாலிபர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர் வெங்கடேஸ்வரா நகர் தாகூர் தெருவை சேர்ந்தவர் மீரான் கலிமுல்லாகி (31). இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் பண்ணைக்குளம் கிராமம். இவரது மனைவி, குழந்தைகள் சொந்த ஊரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஆவடி அருகே திருமுல்லைவாயலில் உள்ள சாலையோர தள்ளு வண்டி கடையில் கலிமுல்லாகி பரோட்டா மாஸ்டராக இருந்தார்.
நேற்றிரவு நண்பர்களுடன் பரோட்டா சாப்பிட்டுவிட்டு அறையில் தூங்கியுள்ளார். அதிகாலை 2 மணியளவில் கலிமுல்லாகி கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு தவித்துள்ளார். இதனையடுத்து, நண்பர்கள் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கலிமுல்லாகி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.