போலியோ போல கொரோனா தொற்று இன்னும் ஒழியவில்லை.. எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்..!

By vinoth kumarFirst Published Oct 10, 2021, 1:11 PM IST
Highlights

கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் போல, அவர்களால் மற்றவர்களும் பாதிப்படைவார்கள். தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்றார். 

அடுத்து வரும் 3 மாதங்களுக்கு டெங்கு பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்;- கொரோனா தடுப்பூசி போடுவதற்காக இன்று 5-வது வாரமாக சிறப்பு முகாம் நடத்தப்பட்டு உள்ளது.  32,017 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் செயல்படுகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வருகிறார்கள். தற்போதுவரை மொத்தமாக 5.03 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில், அரசு மூலம் 4.78 டோஸ் தடுப்பூசியும், தனியார் மூலம் 25.70 லட்சம் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன. அதில், 3.74 கோடி முதல் தவணை தடுப்பூசியும். 1.29 கோடி 2வது தடுப்பூசியும் அடங்கும். 

கொரோனா தடுப்பூசி போட்ட மாவட்டங்களில் நோய் தொற்று குறைவாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே அனைவரும் தயக்கமின்றி தடுப்பூசி போடுவதற்கு முன்வர வேண்டும். போலியோ போல கொரோனா தொற்று இன்னும் ஒழிக்கப்படவில்லை. அதனை பொதுமக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் போல, அவர்களால் மற்றவர்களும் பாதிப்படைவார்கள். தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்றார். அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை முழுமையாக மக்கள் கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

வீடுகளை சுற்றி தேங்கியுள்ள நல்ல தண்ணீரில் தான் ஏடிஸ் கொசுக்கள் பரவுகின்றன. எனவே பொதுமக்கள் தங்களது வீட்டை சுற்றி மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக வீட்டின் மொட்டை மாடிகளில் மழைநீர் தேங்கும் வகையிலான பொருட்களை போட்டு வைக்கக் கூடாது. தண்ணீர் தொட்டிகளுக்குள் கொசு செல்ல முடியாத அளவுக்கு மூடி வைக்க வேண்டும். நல்ல தண்ணீரில் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிடுவதால் கொசு உற்பத்தி அதிகரிக்கிறது. இதனை பொதுமக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

சேலம், திருச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 3 பேர் வரை இந்த ஆண்டு உயிரிழந்துள்ளனர்.டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் நிலவேம்பு கசாயம் நல்ல பயன் அளிப்பது தெரியவந்துள்ளது. எனவே பொதுமக்கள் அதனை தயக்கமின்றி பயன்படுத்தலாம் என ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

click me!