ஸ்டாலின் அரசை பாராட்டி மோடி அரசுக்கு குட்டு வைத்த சென்னை உயர்நீதிமன்றம்… காரணம் என்ன தெரியுமா?

By manimegalai aFirst Published Oct 9, 2021, 8:04 PM IST
Highlights

பிளாஸ்டிக் ஒழிப்பை அனைத்து மாநில அரசுகளும் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பிளாஸ்டிக் ஒழிப்பை அனைத்து மாநில அரசுகளும் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுவை ப்ளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பி.டி ஆஷா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது  தமிழக அரசின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்பிரியா சாஹு, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தமிழகத்தில்  பிளாஸ்டிக் பயன்பாட்டை படிப்படியாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

மேலும், அவர் தாக்கல் செய்திருந்த அறிக்கையில்,  பிளாஸ்டிக்கை ஒழிக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆசியாவின் மிகப்பெரிய மொத்த பழங்கள் மற்றும் காய்கறி சந்தையான கோயம்பேடு வளாகங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்தி பாரம்பரிய பைகளுக்கு மாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. வியாபாரிகள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளனர். பிளாஸ்டிக் ஒழிப்பை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மீடியாக்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு உதவுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கூறியுள்ளார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்வதை அகில இந்திய அளவில் நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து மாநிலங்களும் மத்திய அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று தெரிவித்தனர். மேலும், பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக பிரதமரால் நடத்தப்பட்ட பிரகதி என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கூட்டத்திற்குப் பிறகு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிப்திகள் வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

click me!