சென்னையில் பயங்கரம்.. ஒரே பகுதியில் 700 பேருக்கு கொரோனா தொற்று... அதிர்ந்து போன சுகாதாரத்துறை..!

By vinoth kumarFirst Published Apr 29, 2021, 3:57 PM IST
Highlights

சென்னை ஆதம்பாக்கத்தில் 3 வார்டுகளில் 700 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இந்த பகுதி சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. 

சென்னை ஆதம்பாக்கத்தில் 3 வார்டுகளில் 700 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இந்த பகுதி சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா 2வது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக சென்னை தினசரி பாதிப்பு எண்ணிக்கை 5000ஐ நெருங்கியள்ளது. நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 4,764 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,23,452ஆக உயர்ந்துள்ளது. இதனால், சென்னையில் பெரிய மால்கள், சினிமா தியேட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆதம்பாக்கம் பகுதியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து உள்ளது. 163, 165, மற்றும் 177 ஆகிய 3 வார்டுகளில் தொற்று பரவல் தீவிரமடைந்து உள்ளது. 3 வார்டுகளிலும் 700 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 177-வது வார்டில் பாதிப்பு அதிகரித்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பகுதியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டதையடுத்து  சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணாநகர், ராயபுரம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அடையாறு, ஆலந்தூர் மண்டலத்திலும் தொற்று அதிகரித்து உள்ளது. இந்த 2 மண்டலத்திலும் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். வீடு வீடாக சென்று பரிசோதனை, காய்ச்சல் முகாம் போன்ற அடிப்படையான தடுப்பு நடவடிக்கைகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

click me!