சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் உள்ள மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1417 மாணவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 67 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
சென்னை குரோம்பேட்டை உள்ள எம்ஐடி கல்வி நிறுவனத்தில் 67 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த மே மாதம் கொரோனா உச்சத்தில் இருந்தது. ஒரு நாளைக்கு 35 ஆயிரம் பேருக்கும் அதிகமான எண்ணிக்கையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் காரணமாக கொரோனா படிப்படியாக குறைய தொடங்கியது. கடந்த வாரம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 600 என்ற அளவுக்கு இருந்தது. இதனால், பொதுமக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் உருமாறி ஒமிக்ரான் என்ற புதிய வைரஸ் தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெருநகர பகுதிகளில் வேகமாக பரவ தொடங்கியது. இதனால் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 2,731 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினத்துடன் ஒப்பிடும்போது 1003 பேருக்கு கூடுதலாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று சென்னையில், 1489 பேருக்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் உள்ள மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1417 மாணவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 67 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இன்னும் பல்வேறு மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் வர வேண்டி இருப்பதால் எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. தொற்றால் பாதிக்கப்பட்ட 67 பேரும் விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் எம்.ஐ.டி கல்வி நிறுவனம் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.