Coronavirus: சென்னையில் அதிர்ச்சி.. ஒருவரால் 34 மாணவர்களுக்கு பரவிய கொரோனா..!

By vinoth kumarFirst Published Jan 1, 2022, 8:25 AM IST
Highlights

சிறப்பு பயிற்சி வகுப்பில் படித்து வந்த சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த மாணவன் ஒருவர், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வீட்டிற்கு சென்றுவிட்டு, பயிற்சி மையத்துக்கு வந்து விடுதியில் தங்கி படித்துள்ளார். கடந்த 28ம் தேதி அந்த மாணவனுக்கு சளி, காய்ச்சல் அறிகுறி இருந்துள்ளது.

சென்னையில் நீட் பயிற்சி மையத்தில் 34 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட 2வது அலை கோரத்தாண்டவம் ஆடியது. இதில், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பல்லாயிரக்கணக்கான பொதுக்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா கட்டுக்குகள் கொண்டுவரப்பட்டது. தடுப்பூசி பணியும் விரைவுப்படுத்தப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் மற்றும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தில் நேற்று 1,04,615 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 1155 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து கொரோனாவிற்கு 7,470 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 11 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதிகபட்சமாக நேற்று சென்னையில் 589 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து வந்த 120 பேருக்கு ஒமிக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் அரசு மாதிரி பள்ளி  உள்ளது. இங்கு நீட் உள்ளிட்ட சிறப்பு படிப்புகளுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.  இந்நிலையில், சிறப்பு பயிற்சி வகுப்பில் படித்து வந்த சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த மாணவன் ஒருவர், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வீட்டிற்கு சென்றுவிட்டு, பயிற்சி மையத்துக்கு வந்து விடுதியில் தங்கி படித்துள்ளார். கடந்த 28ம் தேதி அந்த மாணவனுக்கு சளி, காய்ச்சல் அறிகுறி இருந்துள்ளது. இதனால் அவர் கொரோனா பரிசோதனை செய்தில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து  பயிற்சி மைய விடுதியில் தங்கி படிக்கும் 71 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவர்களின் பரிசோதனை முடிவு நேற்று வந்தது. இதில், 24 மாணவர்களும், 10 மாணவிகளும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்களை சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த பள்ளியில் 34 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இவர்களின் குடும்பத்தினருக்கும் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

click me!