Corona 3rd Wave சுனாமி போல் கொரோனா 3வது அலை. கொரோனா நோயாளிகள் 5 நாட்களில் டிஸ்சார்ச் - அமைச்சர் மா.சு. தகவல்!

By manimegalai aFirst Published Jan 2, 2022, 11:14 AM IST
Highlights

சென்னையில் வீட்டு தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகள் ஆலோசனைகளை பெறுவதற்கு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொலைபேசி மூலம் நோயாளிகள் மருத்துவ உதவியை பெற முடியும்.

சென்னையில் வீட்டு தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகள் ஆலோசனைகளை பெறுவதற்கு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொலைபேசி மூலம் நோயாளிகள் மருத்துவ உதவியை பெற முடியும்.

இந்தியாவில் டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகை கொரோனா ஒன்றிணைந்து சுனாமி அலை போல் பரவி வருகிறது. தொற்று பரவல் வீரியம் முன்பை விட மூன்று மடங்கு வரை அதிகரித்து இருப்பதால் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கி விட்டதாகவே மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். ஒமைக்ரான் வகை கொரோனாவால் அதிக ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.

மருத்துவ உட்கட்டமைப்புகளை அதிகரிக்க வேண்டும். வீட்டு தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்க வேண்டும். மாவட்டம், உட்கோட்டங்கள் அளவில் கொரோனா கட்டுப்பாட்டு அறைகள், அழைப்பு மையங்களை அமைக்கவும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒமைக்ரான் பரவலை கருத்தில்கொண்டு தனியார் ஓட்டல்கள் உள்ளிட்டவற்றை தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றி படுக்கைகள் வசதியை அதிகரிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிலும் கடந்த ஒரு வாரமாகவே ஒமைக்ரான் மற்று டெல்டா வகை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் இன்றும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. சென்னையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களும் இன்று நடைபெறுகிறது. சைதாப்பேட்டையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மழைக் கால சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கூறியதாவது.

தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்களில் இதுவரை சராசரியாக 86.22% பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 58.82 % பேர் இரண்டாம் தவணை செலுத்திகொண்டுள்ளனர். இந்தியாவில் தற்போது டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகை கொரோனா ஒன்றிணைந்து மூன்றாவது அலையாக வீசுகிறது. கொரோனா மூன்றாவது அலையானது சுனாமி பேரலையை போல் இருக்கும். 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த தேவையான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை நாளைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

60 வயதுக்கும் மேற்பட்டவர்கள், மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு வரும் 10-ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும். கொரோனா இரண்டாவது அலையின் போது ஒரே நாளில் பதிவான கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட மூன்றாவது அலையில் உச்சம் கடந்துவிடுமோ என்ற அச்சம் உள்ளது.

கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களை 5 நாட்களுக்குப் பின்னர் வீட்டு தனிமைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர் அதற்கான அறிகுறி தென்படாமல் இருப்பவர்கள் மற்றும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய பின்னரும் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு பல்ஸ் ஆக்சி மீட்டர் வழங்கி வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பின்னர் இந்த நடைமுறை அமலுக்கு வரும். அவ்வாறு வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள்  தொடர்ந்து கண்கானிக்கப்படுவார்கள். சென்னையில் உள்ள ஒரு சில கல்லூரி விடுதிகளை தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றும் பணிகள் நடைபெறுகிறது.

இதனிடையே சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கை சென்னை மாநகராட்சி மருத்துவர்களை நியமித்துள்ளது. 044-25384520 044-46122300 ஆகிய எண்களில் தோர்பு கொண்டு கொரோனா நோயாளிகள் மருத்துவ உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பின் அறிகுறி இல்லாதவர்கள் மற்றும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் வீட்டுத் தனிமைக்கு அனுமதிக்கலாம் என அனைத்து மாவட்ட மற்றும் மாநகராட்சிகளுக்கு பொதுசுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

click me!