ஒரே நேரத்தில் 118 பேருக்கு கொரோனா... விஜயா மருத்துவமனை இழுத்து மூடல்..!

By vinoth kumarFirst Published Jul 5, 2020, 12:38 PM IST
Highlights

சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அம்மருத்துவமனையை மாநகராட்சி அதிகாரிகள் தற்காலிகமாக மூடியுள்ளனர். 

சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அம்மருத்துவமனையை மாநகராட்சி அதிகாரிகள் தற்காலிகமாக மூடியுள்ளனர். 

வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனை, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அரசால் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதனிடையே, மருத்துவமனையின் நிரவாக இயக்குநர் சரத்ரெட்டி கொரோனா பாதிப்பினால்  கடந்த சில வாரங்களுக்கு முன் உயிரிழந்தார். இதேபோல், அதே மருத்துவமனையில் பணியாற்றிய 52 வயதான ஊழியர் ஒருவரும் சமீபத்தில் உயிரிழந்தார்.  ஆனாலும், மருத்துவமனை நிர்வாகம் கொரோனா நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் என 118 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, விஜயா மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

இது குறித்து மருத்துவமனை நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு;- விஜயா மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியா்கள் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து மருத்துவமனையின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன. ஏற்கெனவே, விஜயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உள்நோயாளிகள், மருத்துவமனைக்கு எதிா்ப்புறம் உள்ள விஜயா ஹெல்த் சென்டருக்கு மாற்றப்பட்டுள்ளனா். நிலைமை சற்று சீராகும் வரை அவசரகால சிகிச்சை உள்பட அனைத்து சிகிச்சைகளும் நிறுத்தப்படுகின்றன. 

அதேவேளையில், விஜயா மருத்துவமனையை நாடி வரும் நோயாளிகளின் நலன் கருதி அவா்களை வேறு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கவும், அவா்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு தற்காலிகமான ஒன்றுதான். நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட பிறகு விரைவில் வழக்கம்போல மருத்துவ சேவைகள் தொடங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!