அதிர்ச்சி... 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி... பள்ளியை இழுத்து மூட உத்தரவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 18, 2021, 11:43 AM IST
Highlights

சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆசிரியருக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. 

தமிழகத்தில் சிறிது காலம் அடங்கி இருந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் மட்டும் 71,888 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 945 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. நேற்று மட்டும் 576 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 ஆயிரத்து 811 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று உயிரிழந்த 8 பேருடன் சேர்த்து இதுவரை 12,564 பேர் மரணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தேர்தல் நேரத்தில் கூட்டங்கள் கூடுவதும், மாஸ்க் அணியாமல் மக்கள் அலட்சியம் காட்டுவதும் கொரோனா பெருந்தொற்றுக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தஞ்சாவூர், மன்னார்குடி உள்ளிட்ட பள்ளிகளைத் தொடர்ந்து தற்போது சென்னையைச் சேர்ந்த பள்ளி ஒன்றில் கொரோனாவின் தாக்கம் தலைகாட்டியுள்ளது. 

சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆசிரியருக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருடன் பணியாற்றிய ஒரு பெண் ஆசிரியை, ஆசிரியருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். 

3 நாட்களுக்கு பள்ளியை மூட உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றுள்ளன. அதுமட்டுமின்றி 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்ற அறிவிப்பு பலகையும் பள்ளி முன்பு வைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை சார்பில் 80 மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

click me!