லாக்டவுனை மதிக்காமல் வெத்தாய் ஊர் சுற்றி... ஒரே நாளில் சென்னையில் கொத்தாய் சிக்கியது இவ்வளவு பேரா?

By Kanimozhi PannerselvamFirst Published May 15, 2021, 11:10 AM IST
Highlights

நாள்தோறும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 24ம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 31,892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 31 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 லட்சத்து 95 ஆயிரத்து 339  பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 538 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாள்தோறும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 24ம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை நண்பகல் 12 மணி வரை மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகளை திறந்து வைக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதாக கூறி வெளியே வந்து தேவையில்லாமல் ஊர் சுற்றும் நபர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. 

ஊரடங்கை அலட்சியப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சென்னையில் மட்டும் சட்டம் ஒழுங்கும் போலீசார் 200 இடங்களிலும், போக்குவரத்து காவல்துறையினர் 118 இடங்களிலும் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் தேவையின்றி வெளியே சுற்றியதாக ஆயிரத்து 110 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

இதில் தொடர்புடைய 169 இருசக்கர வாகனங்கள், 6 ஆட்டோக்கள், 11 இலகு ரக வாகனங்கள் போக்குவரத்து காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சட்டம் - ஒழுங்குப் பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் 969 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆயிரத்து 541 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் முகக்கவசம் அணியாதது தொடர்பாக 1,346 வழக்குகளும், தனி மனித இடைவெளியை கடைபிடிக்காததாக 83 வழக்குகளும், அரசு அனுமதித்த நேரத்தை விட அதிகமாக கடைகளை திறந்து வைத்திருந்ததாக 64 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

click me!