சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட 30,000 பேர் வீட்டு தனிமை.. மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல்..!

By vinoth kumarFirst Published May 14, 2021, 6:46 PM IST
Highlights

வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்க இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் பணியில் ஈடுபடுவர் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி கூறியுள்ளார். 

வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்க இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் பணியில் ஈடுபடுவர் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி கூறியுள்ளார். 

சென்னை ரிப்பன் மாளிகை அம்மா அரங்கில் , கட்டுப்பாட்டு அறைகளில் பணியில் ஈடுபட உள்ள மருத்துவ இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி;-  வீட்டுத் தனிமையில் அதிகம்பேர் இருப்பதால் அவர்கள் மருத்துவர் குழுவுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என அரசும், மாநகராட்சியும் விரும்புகிறது. அவர்களின் நிலை குறித்து தெரிந்து மாற்று, மேல் சிகிச்சை தேவைப்பட்டால் அதை ஏற்படுத்தும் விதமாக 300 இறுதியாண்டு மருத்துவ மாணவர்களை கட்டுப்பாட்டு அறைகளில் பணியில் அமர்த்த முடிவு செய்தோம். 

இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 135 மாணவர்கள் கலந்து கொண்டனர். காலை 8 முதல் மாலை 3 மணி வரை ஒரு ஷிப்ட்  மாலை 3 முதல் இரவு 10 மணி வரை ஒரு ஷிப்ட் மாணவர்களும் பணியில் இருப்பர். இவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு முறையேனும் வீட்டுத் தனிமையில் உள்ள தொற்றாளர்களை தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரிப்பர். 

உணவுக்கு முன் பின் என மாத்திரைகளை எடுத்துக் கொள்வது தொடர்பாக ஆலோசனை வழங்க கொரோனா சிகிச்சை மையம் அல்லது  மருத்துவமனைகளுக்கு உரிய நோயாளிகளை மாற்ற இவர்கள் சுகாதார ஆய்வாளர்களுக்கு பரிந்துரை வழங்குவர். பணியில் ஈடுபடும் மருத்துவ இறுதி ஆண்டு மாணவர்களுக்கு 40,000 மாத ஊதியம் வழங்கப்படும். ஒற்றை அறை கொண்ட வீடுகளுக்குள் இருக்கும் கொரோனா நோயாளிகள் உடனடியாக கோவிட் கேர் மையத்திற்கு செல்ல வேண்டும். தற்போது கோவிட் கேர் மையங்களில் 3748 படுக்கைகள் காலியாக இருக்கின்றன. தேவைப்பட்டால் மேலும் 10,000 படுக்கைகள் கூட ஏற்படுத்துவோம். 

சென்னையில் 21 கோவிட் கேர் மையங்கள் உள்ளன. திரவ ஆக்சிஜன் தொடர்பாக முதல்வர் தனியாக குழு அமைத்துள்ளார். மாநகராட்சிக்கு 900 க்கு மேல் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வந்துள்ளன. 2900 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். சுகாதாரத்துறை வழிகாட்டுதலை ஏற்று ஒருங்கிணைந்த முறையில் பணி செய்ய மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது. கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகளை ஏற்படுத்துவது, திரவ ஆக்சிஜன் கொள்முதல் , கொரோனாவை குறைப்பதற்கான ஊரடங்கை தீவிரப்படுத்துவது என மூன்று நிலைகளில் பணி நடைபெற்று வருகிறது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

click me!