சென்னையில் மெட்ரோ ரயில் சேவை சில வழித்தட மாற்றங்களுடன் நாளை (செவ்வாய்க்கிழமை) வழக்கம்போல் செயல்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மிக்ஜம் புயலால் கனமழை பெய்துவரும் நிலையில் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் குறிப்பிட்ட வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மாற்றத்துடன் செவ்வாய்க்கிழமை (நாளை) வழக்கம்போல மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செயிண்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ ரயில் நிலையத்தில் 4 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கி, பயணிகள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக அந்த ரயில் நிலையத்தில் சேவை தடைபட்டு இருக்கிறது. ஆனால், பயணிகள் ஆலந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து மெட்ரோ சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வரும் சாலையிலும் மழைநீர் தேங்கியிருக்கிறது. இதனால், பயணிகள் ரோஹினி தியேட்டர் அருகே உள்ள நடை மேம்பாலம் வழியாக மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய சாலையிலும் இதே நிலை இருக்கிறது. அரசினர் தோட்ட மெட்ரோவுக்குச் செல்லும் வாலஜா சாலை சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் மாற்று வழிகளில் வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் இயக்கப்படும் மற்ற பகுதிகளில் அதிக அளவு மழைநீர் தேங்கவில்லை என்றும் மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல காலை 5 மணி முதல் இயங்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியிருக்கிறது.