நாய்களின் நிலை என்ன?... தமிழக கால்நடை துறைத்துக்கு அதிரடி உத்தரவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 1, 2021, 1:27 PM IST
Highlights

சென்னை ஐ ஐ டி வளாகத்தில் உள்ள நாய்களின் நிலை என்ன என்பதை ஆய்வு செய்து, அவற்றுக்கும் உணவளிக்க வேண்டும் என தமிழக கால்நடைத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவளிக்க கோரி சிவா என்பவர் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், கால்நடைகளுக்கு உணவளிக்க, ஆளுநர் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளதாகவும், அதில் இருந்து, 823 கால்நடைகள், 102 குதிரைகள்,17 ஆயிரத்து 979 தெரு நாய்களுக்கு உணவளிக்கப்பட்டுள்ளதாகவும், விலங்குகளுக்கு உணவளிக்க செல்வோருக்கு 123 அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அரசு ஒதுக்கீடு செய்த 9.2 லட்சம் ரூபாயை இன்னும் விடுவிக்கவில்லை எனத் தெரிவித்தார்.உயர் நீதிமன்றம் நியமித்த குழு தரப்பு வழக்கறிஞர், சென்னை ஐ.ஐ டி. வளாகத்தில் உள்ள தெரு நாய்களின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும், நாய்களுக்காக பால் பவுடர்கள் வழங்கப்பட்டதாகவும், அவற்றை நாய்களுக்கு கொடுக்க முடியாது என்பதால், ஏழை மக்களுக்கு அதை வழங்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரினார்.

இதையடுத்து, தெரு விலங்குகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விரைவில் விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள நாய்களின் நிலையை அறிந்து அவற்றுக்கும் உணவளிக்க வேண்டும் எனவும், அதற்கு ஐ.ஐ.டி. நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். மேலும், பால் பவுடரை தகுதியான நபர்களை கண்டறிந்து வழங்க அனுமதியளித்த நீதிபதிகள், விசாரணையை ஜூன் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

click me!