வீடில்லாதவர்களுக்கும் இதை உடனடியாக செய்யுங்கள்... தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 1, 2021, 10:49 AM IST
Highlights

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் வீடில்லா, நடைபாதையில் வசிக்கும் மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய  தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம்  அறிவுறுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் முருகானந்தம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கொரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள இலவச தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும், அதற்கு அடையாள அட்டைகள் கேட்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் அடையாள அட்டை இல்லாத வீடில்லா மக்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவோ, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவோ முடியாத நிலையில் உள்ளதாகவும்,  தடுப்பூசி செலுத்தினால் தான் அவர்களின் உயிரை பாதுகாக்க முடியும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

தொற்று பாதிக்கும் அபாயம் அதிகமுள்ள வீடில்லா மக்களை கணக்கெடுத்து, அடையாள அட்டைகள் இல்லாத அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, வீடில்லாத, நடைபாதையில் வசிக்கும் மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், இதுசம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தது.

click me!