
பொது விநியோக திட்டத்தின் கீழ் பருப்பு மற்றும் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டரை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. இந்த டெண்டரில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள், கடந்த மூன்று ஆண்டுகளில் 72 கோடி ரூபாய் விற்றுமுதல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை, 11 கோடி ரூபாய் எனக் குறைத்துள்ளதாக கூறி, டெண்டருக்கு தடை கோரி, நான்கு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த மதுரைக் கிளை, டெண்டருக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்க கோரி தமிழக அரசு சார்பில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கிடையில், தற்போதைய சூழ்நிலையைச் சுட்டிக்காட்டி, பிரதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக நிறுவனங்கள் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பிரதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்ற நீதிபதிகள், டெண்டருக்கு விதித்த தடையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.பிரதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து அவற்றை தள்ளுபடி செய்த நீதிபதிகள், அரசின் மேல் முறையீட்டு வழக்குகளை முடித்து வைத்தனர்.